"A Call to Renewal"- Ash Wednesday 2026 (2mins Read)

புதுப்பித்தலுக்கான அழைப்பு

முன்னுரை 

மறுபடியும் ஓர் திருநீற்று புதன் அல்லது சாம்பல் புதனில் நாம் சந்திக்கிறோம். இன்றிலிருந்து எமது உபவாச நாட்கள் ஆரம்பிக்கின்றன. பொதுவாக எல்லா சமயங்களிலும் உபவாசங்கள் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும், இவைகள் பல சந்தர்ப்பங்களில் தனிநபர் சார்;ந்தவைகளாகவும் சமூகம் சார்ந்தவைகளாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றன. இவ் உபவாசங்களில் புதுப்பித்தல்கள் அவசியமாகின்றன. இன்றைய திருமறை பகுதிகள் அனைத்தும் ஓர் புதிய அனுபவங்களுக்குள் எங்களை அழைத்து நிற்கின்றது.

1. அறவாழ்வில் புதுப்பித்தல்

எசேக்கியேல் இறைவாக்கினர் நூல் 36:24-36ம் வாக்கியங்கள் வரையுள்ள பகுதி இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியாவில் அடிமைத்தனத்தில் இருந்த காலப்பகுதியில் எழுதப்பட்டதாகும். குறிப்பாக, கி.மு.586க்கும் 539க்கும் இடைப்பட்ட காலப்பகுதி என பொதுவாக நம்பப்படுகின்றது. இக்காலப்பகுதியில் எசேக்கியேல் இறைவாக்கினர் இஸ்ராயேல் மக்களை நோக்கி அவர்களின் அறவாழ்விலும் அருவருப்பான வாழ்விலும் சிலைவழிபாடுகளிலும் இறைவனுக்கு பிரியமற்ற வாழ்விலும் இருந்து தங்களை புதுப்பித்துக் கொள்ள இறைவாக்கினர் அழைக்கின்றார். இதனூடாக அவர்கள் இழந்த நன்மைகளைப் பெறவும், தங்கள் இல்லங்களில் வதிவிடங்களை அமைத்து அவர்கள் விளைச்சல்களை அனுபவிக்கவும் வாய்ப்பு உண்டாகும் என உறுதிமொழி கூறுகின்றார். இதற்கூடாக அவர்களுக்குரிய வாழ்வு கிடைக்கும் என அவர் வலியுறுத்துகின்றார். எனவே இப்பகுதியில் வாழ்வில் புதுப்பித்தல் அவசியம் என்பதைக் காண்பிக்கின்றார்.

2. சரீரத்தை புதுப்பித்துக் கொள்ளுதல்

திருப்பாடல் 51இலும் உரோமையர் 11:32-12:2 வரையுள்ள பகுதியில் சரீரத்தைப் பற்றி அல்லது உடலைப் பற்றி பேசப்படுகின்றது. அதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் அறிவு நெறிக் கோட்பாட்டாளர் ‘சரீரம் கெட்டது. ஆவி நல்லது’ என எண்ணினர். எனவே சரீரத்தை தமது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம் என எண்ணினர். அதனை ஓர் இன்பப் பொருளாகவே கருதினர். இத்தகைய பின்னணியிலேயே திருப்பாடல் 51ல், தாவீது தனது சரீரத்தை தனது நோக்கத்துக்காக பயன்படுத்தியது தவறு என்பதை உணர்கின்றார். பத்சேபாளோடு இருந்த தகாத உறவு தவறானது என்பதை நாத்தான் இறைவாக்கினர் சுட்டிக்காட்டிய பின், பலியை அல்ல கடவுள் மனிதனின் நொறுங்குண்ட இதயத்தையே நாடுகிறார் என்ற உண்மையை உணருகிறார். இதனையே புனித பவுலும் உங்களுடைய உடலை உயிருள்ள பலியாக இறைவனுக்குக் கொடுங்கள் எனக் கூறுகின்றார். சிறப்பாக, சரீரம் கடவுளுடைய ஆலயம். ஒருவர் சரீரத்தைக் கெடுக்கும்போது அவர் கடவுளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்ற உண்மை 1 கொரிந்தியர் 3:16,17ம் வசனங்களில் பொதிக்கப்பட்டுள்ளது. எனவே சரீரம் குறித்த சிந்தனை புதுப்பிக்கப்படுதல் இந்நாட்களில் அவசியமாகின்றது. குறிப்பாக சரீரத்தின் ஒவ்வொரு அவயவங்களும் நோன்பின் அனுபவத்தை அனுபவிக்க வேண்டும்.

3. சடங்காச்சாரங்கள் புதுப்பிக்கப்படுதல் அவசியமாகின்றது

ஆண்டவர் இயேசு இரண்டாவது மோசேயாக மலைப்பொழிவு உபதேசத்தின்போது இச் சிந்தனையை வலியுறுத்துகின்றார். மத்தேயு 6:5-18ல் முக்கிய சடங்காச்சாரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். குறிப்பாக, இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தும் மன்றாடல் ஓர் தனிப்பட்ட உறவாகவும் விளம்பரமற்ற அனுபவமாகவும் மாற வேண்டும் என வலியுறுத்துகிறார். மேலும், கடவுள் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் உரியவர் என்ற உண்மை வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் உபவாசம் என்னும் எண்ணக்கருவைப் பற்றி குறிப்பிடும்போது விளம்பரமற்ற முறையில் அர்த்தத்துடன் உபவாசம் அமைய வேண்டும் எனக் கூறப்படுகின்றது. தனிப்பட்ட ஆன்மீக மையத்தில் அல்ல. இது ஓர் விடுதலை சார்ந்த அனுபவமாக மாற வேண்டும் என ஏசாயா 58:1-10 வரையுள்ள வாக்கியங்கள் பேசுகின்றன. மேலும் நாம் பிறருக்கு வழங்கும் தானதர்மங்கள் கூட விளம்பரமற்ற முறையில் இரகசிய தன்மையுள்ளதாக கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆன்மீகத்தில் புதுமையான சிந்தனைகள் இருக்க வேண்டும் என உணர்த்தப்படுகின்றது. 

முடிவுரை

உபவாச நாட்;களுக்குள் பிரவேசிக்கும் போது நாம் கடைப்பிடித்து வருகின்ற சடங்காச்சாரங்களிலும் எமது சிந்தனைகளிலும் அறவாழ்விலும் மாற்றங்களை உருவாக்குவோம். இவைகள் இறையரசு மையத்தில் ஆற்றப்பட வேண்டும் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுவோம். ஆமேன். 

ஆக்கம் 

அருட்பணி.அருளம்பணி ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர் 

Comments