"Call to shoulder each other's burdens"- (2 Mins Read)

ஒருவர் மற்றவர்களின் பாரங்களை சுமருங்கள்

முன்னுரை 

நாம் வாழும் உலகில் பல வேளைகளில் நாம் மற்றவர்களுக்கு சுமையாக இருக்கின்றோம் என எண்ணுகின்றோம். மேலும் 21ம் நூற்றாண்டு மற்றவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற ஒரு நூற்றாண்டு. இந்நூற்றாண்டில் ஒருவர் மற்றவர் மீது கரிசனையாய் வாழுங்கள் என்பது திருவிவிலியம் தரும் போதனையாகும். இதனையே அன்னை தெரேசாவும் தனது கூற்றுக்களில், “நீங்கள் மற்றவர்களுடைய பாரங்களை சுமருங்கள்” எனக் கூறுகின்றார்.

1. பாரங்களைச் சுமப்போர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 41:1-13 வரையுள்ள பகுதியில் ‘யார் பேறுபெற்றோர்’ என்பதை இப்பகுதி எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. திருப்பாடல் 15இலும் ‘யார் பேறுபெற்றோர்’ என்பதைப் பற்றி பேசும்போது ‘நல் அற வாழ்வுள்ளவர்கள் பேறுபெற்றவர்கள்’ என கூறப்படுகிறது. 

மத்தேயு 5:1-12 வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு ‘யார் பேறுபெற்றோர்’ என்பதனை புதிய இஸ்ராயேலராகிய திருச்சபைக்கு எடுத்துக் காண்பிக்கின்றார். இதனொளியில் திருப்பாடலை எழுதிய ஆசிரியர், “ஒருவர் மற்றவர் சுமையை சுமப்பாரானால் அவர் பேறுபெற்றவர். சிறப்பாக எளியோரின் சுமைகளை சுமப்பவர் பேறுபெற்றவர்” எனக் கூறுகின்றார்.

மேலும் திருப்பாடலின் நிறைவுப்பகுதிகளில் தனது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார். தான் மற்றவர்களுடைய பாரங்களை சுமக்க முற்படும் வேளையில் 

தனக்கெதிராக தீங்கிழைப்பவர்கள், உண்டு விட்டு இரண்டகம் செய்பவர்கள், தன்னை வீண்பழி சுமத்துபவர்கள் போன்ற காரியங்களை எடுத்துக் காண்பிக்கின்றார். 

இது அவரது திருப்பாடல்களில் சாதாரண நிலையையே எடுத்துக் காண்பிக்கின்றது. திருப்பாடல் 120:1-6இலும் இப்பேர்ப்பட்ட தன் எதிரிகளால் தனக்கு ஏற்படும் தீங்குகளை அவர் குறிப்பிட்டாலும் எல்லோருடைய பாரங்களையும் சுமப்பது தனது அழைப்பென உறுதியாய்க் கூறுகின்றார். 

2. சுமைகளை சுமத்தல் இயேசுவின் அன்புக் கட்டளை 

ஆண்டவர் இயேசு பல்வேறுப்பட்ட கட்டளைகளை எமக்குத் தந்துள்ளார். விசேஷமாக மத்தேயு 28:19,20யே இன்று பிரதானமான கட்டளை எனக் கருதி அதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். எனினும் யோவான் 13:34,35ல் “நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். அதனூடாக என்னுடைய சீடர்கள்” என்பதை உலகத்தார் கண்டுகொள்வார்கள் என கட்டளை பிறப்பிக்கின்றார். 

இக்கட்டளையின் இன்னுமொரு வடிவத்தையே புனித பவுல் கலாத்திய திருச்சபைக்கு எழுதிய திருமுகத்தில் 6:1-10 வரையுள்ள பகுதியில், “நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய சுமைகளை சுமக்கும்போது கிறிஸ்து எமக்குக் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுகின்றோம்” எனக் கூறுகின்றார். அதுதான் அன்புக் கட்டளை. மேலும், “நாம் எதை விதைக்கின்றோமா அதை அறுப்போம்” என்றும் ஆசிரியர் எமக்குப் புத்திமதி கூறுகின்றார். 

எனவே நாங்கள் அன்பை விதைத்து மற்றவர்களுடைய பாரங்களை நாங்கள் சுமப்பதனூடாக கிறிஸ்து எங்களுடைய பாரங்களை அவர் சுமக்கின்றார். எனவேதான் “பாரங்களை சுமப்போரே எல்லோரும் என்னண்டை வாருங்கள். உங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றேன்” என மத்தேயு 11:28ல் பேசுகின்றார். எனவே நாமும் மற்றவர்களுடைய பாரங்களை சுமப்பது கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுவது ஆகும். 

3. மற்றவர் பாரத்தை சுமந்தவன் வாழ்வில்

2 சாமுவேல் 9:1-13 வரையுள்ள பகுதியில், யோனத்தானாகிய தன்னுடைய நண்பனின் மகன் மேவிபோசேத்து பாரத்தை தாவீது சுமந்தான். மேவிபோசேத் நடக்க முடியாத ஒரு மனிதன் அவன் எங்கு இருக்கிறான் என விசாரித்த தாவீது அவனை வரச் சொல்லி ஆளனப்பி அரண்மனையில் அவனுக்கு ஒரு இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்து, வாழ்வாதாரத்தை அவனுக்கு வழங்கி, அரண்மனையில் தன்னோடு கூட உணவருந்தும் பாக்கியத்தை வழங்கினார். இது ஊனமுற்றோர் அல்லது மாற்றுத்திறனாளிகளை நாங்கள் சுமக்க வேண்டிய ஒரு உன்னத அழைப்பை எங்களுக்கு விடுகின்றது. 

இன்று உலகிலே சிறப்பாக வாழுகின்ற இப்பேர்ப்பட்ட மக்கள் பாரங்களை நாங்கள் சுமக்க வேண்டும். இவர்கள் சரீர பாரங்களை விட சமுதாய ஒடுக்குமுறைகள், பொருளாதார கடினத்தன்மைகள், இவர்களை 

ஒடுக்குகின்ற பழமொழிகள் முதுமொழிகள், இவர்களை துன்பப்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகங்கள், திரு அவையிலும் இவர்களுக்கு நிகழுகின்ற அங்கீகாரமற்ற செயற்பாடுகள் இவைகளில் இருந்து இந்த சமூகத்தில் நாங்கள் விடுதலையைக் கொடுத்து இவர்களை சுமப்பது எங்கள் ஒவ்வொருவருடைய அழைப்பாகும். 

கிட்டத்தட்ட மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் தாவீது இப்பணியைச் செய்தார். இன்றும் இப்பணியைத் தொடர்பவர்களாக நாங்கள் ஒவ்வொருவரும் இருப்பதே எமது உன்னத அழைப்பாகும்.

4. பாரங்களை சுமத்தல் ஓர் விடுதலைப்பணி

ஆண்டவர் இயேசு பல்வேறுப்பட்ட நோய்களில் இருந்து மக்களை குணப்படுத்தியதை மாற்கு நற்செய்தியாளன் காண்பிக்கின்றார். மாற்கு 3:1-6 வரையுள்ள பகுதியில் சூம்பின கையை உடைய ஓர் மனிதனைக் குணப்படுத்தல், மாற்கு 4:35-45ல் இயற்கையில் அமைதியை ஏற்படுத்துதல், மாற்கு 5:1-19ல் பேய்பிடித்த மனிதனை குணப்படுத்துதல், போன்ற புதுமைகளை ஆற்றிய இயேசு மாற்கு 2:1-12ல் முடக்குவாதமுற்ற ஒரு மனிதனை குணப்படுத்துவதை நாம் காணலாம். 

இதற்கு ஒத்த ஒரு நிகழ்வு யோவான் நற்செய்தி 5:1-19 வரையுள்ள பகுதியில் பெதஸ்தா குளத்தில் முப்பத்தெட்டு வருடம் நோயுற்ற ஒரு மனிதனை குணப்படுத்தும் ஓர் நிகழ்வுக்கு ஒத்த ஒரு நிகழ்வாகும். இங்கு இம் மனிதனை சுமந்து வந்த நான்கு சகோதரர்கள் பேசப்பட வேண்டியவர்கள் ஆவர். சன நெருக்கம் அதிகமாக இருந்தபடியால் இவர்கள் இயேசுவண்டை இவரை சுமந்து வந்தார்கள். இங்கே ஒருவருடைய மன்றாடல் இன்னுமொருவரை குணப்படுத்தும் அல்லது ஒருவருடைய முயற்சி இன்னுமொருவருக்கு விடுதலையை கொடுக்கும் என்பது பாரங்களை சுமக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்கின்றது.

இப்பேர்ப்பட்ட சம்பவம் மாற்கு 7:24-30 வரையுள்ள பகுதியில் கானானிய பெண்மணி தனது மகளின் விடுதலைக்காக இயேசுவிடம் மன்றாடியதும், நூற்றுவத்தலைவன் தனது பணியாளனுக்காக இயேசுவிடம் இரந்து கேட்டதையும் லூக்கா 7:1-12 நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் இந்த நிகழ்வில் ஆண்டவர் இயேசு இம்மனிதரை நோக்கி, “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன. படுக்கையை எடுத்துக் கொண்டு போ” என்று சொன்ன வார்த்தை மதத்தலைவர்களிடைய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.

 ஏனெனில் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளிடம் மாத்திரம் உண்டென மக்கள் நம்பினர் (ஏசாயா 43:25). ஆனால் ஆண்டவர் இயேசுவோடு கடவுள் பாவமன்னிப்பை வழங்கும் அதிகாரத்தை பகிர்ந்துகொண்டார். இயேசுவும் தனது சீடர்களுக்கு இவ் அதிகாரத்தை கொடுத்திருந்தார். எனவே இப்பின்னணியிலே “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என இயேசு கூறும் இவ் அதிகாரத்துவமுள்ள வார்த்தைகள் அவரின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காண்பிப்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாகும். 

மேலும் ஆண்டவர் இயேசு இம்மனிதரை “எழுந்து நட” என்று கூறிய வார்த்தைகள் அவன் பல்வேறுபட்ட பிழையான சமுதாய கட்டுக்களினால் கட்டப்பட்டிருந்தான். ஒரு சிலர் பாவங்களுக்கும் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினர். யூதர்கள் மத்தியில் அதாவது இந்நம்பிக்கை காணப்பட்டது. ஆனால் ஆண்டவர் இயேசு இக்கருத்தினை நிராகரித்த ஒருவராகவே காண்பிக்கப்படுகின்றார். யோவான் 9:1-15ம் வசனம் வரையுள்ள பகுதியில் பிறவியிலேயே பார்வையில்லாத ஒரு மனிதனை இயேசுவிடம் கொண்டு வந்து சீடர்கள், “இவன் செய்த பாவமா, இவனை பெற்றவர்கள் செய்த பாவமா?” என வினா எழுப்புகின்றார்கள். அப்பொழுது இயேசு, “இவன் செய்த பாவமுமல்ல, இவனை பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல இறை அன்பு இறை மகிமை வெளிப்படும்படியாகவே இவ்வாறு பிறந்தான்” எனக் கூறி அதாவது நோய்க்கும் பாவத்துக்குமிடையான தொடர்பை நிராகரிக்கின்றார்.

உண்மையிலே ஆண்டவர் இயேசு முடக்குவாதமுற்றவன் தவறை அவர் இங்கு குறிப்பிடவில்லை.  இங்கு அவர் சுட்டிக் காண்பதெல்லாம் சமயத்தலைவர்களுடைய தவறு. 

எனவே அங்கு திமிர்வாதக்காரனுடன் இணைந்து அல்லது முடக்குவாதமுற்ற மனிதனோடு இணைந்து அவனின் பிரதிநிதியாக சமயத்தலைவர்களின் பாவங்களையே இயேசு மன்னிக்கிறார் என்பதை நாங்கள் ஓர் விடுதலைப் பார்வையில் பார்க்க வேண்டும். இதுவே நாம் மற்றவர்களின் பாரத்தை சுமப்பதற்கான இன்னுமொரு சிந்தனை ஆகும். 

எனவே சமுதாய கட்டுக்களால் கட்டப்பட்டு அவனைப் பாவி என்று முத்திரை குத்திய மக்களின் தவறுகளையே இயேசு இங்கு மன்னிக்கிறார் என்பது விடுதலை தரும் ஆறுதல் தரும் செய்தியாகும்.

முடிவுரை

ஆண்டவர் இயேசு எமது பாரங்களை சுமப்பதை போல நாங்களும் மற்றவர்களுடைய பாரங்களை சுமப்பது அவசியம். அது இயேசுவின் அன்புக் கட்டளை. அதைச் செய்வதனூடாக நாம் பேறுபெற்றவர்களாக மாறுவதோடு அவருடைய விடுதலைப்பணிக்கு சான்றாக மாறமுடியும். சிறப்பாக ஊனமுற்ற அல்லது மாற்றுத்திறனாளிகளில் சுமைகள் சுமக்கப்பட வேண்;டியவைகள். தங்கள் உள்ளங்களிலேயே சுமைகளை சுமந்து கொண்டு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத மக்களின் சுமைகள் சுமக்கப்பட வேண்டியவைகள். அதற்கூடாக இறையாட்சியின் பெறுமதியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோமாக. ஆமேன்.  

ஆக்கம் 

அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்

Comments