"The God of Boundless Compassion"- (2 Mins Read)

 இரக்கக்குணமுள்ள கடவுள்


முன்னுரை 

நாம் வாழும் உலகில் கடவுளுக்கு மனிதப் பண்புகளை எடுத்துக் கூறுவது திருவிவிலிய ஆசிரியர்களின் பண்பாகும். இதன்படி அவரை படைப்பாளர் என (தொடக்கநூல் 1:25-28), விடுதலையாளர் (யாத்திராகமம் அல்லது விடுதலைப்பயணம் 3:7), நீதியுள்ளவர் (ஆமோஸ் 5:18-21), அன்புள்ளவர் (யோவான் 3:16), பக்கச்சார்பற்றவர் (மத்தேயு 5:45,46), நல்லவர் (மாற்கு 10:17-22) போன்ற பண்புகள் திருவிவிலியத்தில் காணப்படுகின்றன. ஆனால் இன்றைய தியானத்திற்காக ‘கடவுள் இரக்கமுள்ளவர்’ என்ற கருப்பொருளிலே சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்.

1. கடவுளின் இரக்கம் எல்லோருக்கும் உரியதாகும்

இன்றைய பழைய ஏற்பாட்டு பகுதியில் ரூத் நூல் 2:4-20 வரையுள்ள பகுதியில் கடவுளின் இரக்கம் ரூத் என்ற மோவாபிய பெண்மணியிடமும் காணப்பட்டதை நாம் காணலாம். சிறப்பாக, இந்நூல் பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு பின்னர் அதாவது கி.மு.6ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது என தற்பொழுது ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். எனினும் இங்கு கடவுளினுடைய இரக்கம் அதாவது மோவாபிய பெண்மணியாகிய ரூத் தனது கணவனை இழந்து மாமியார் வசம் இருந்த பெண்மணி தற்போது போவாசின் விளைநிலத்தில் கதிர்களை பொறுக்கும் பணிக்காக அனுப்பப்படுகின்றாள். இவர்மீது போவாஸ் இரக்கம் கொள்வதையும் இவருக்கு வசதி வாய்ப்புக்களை செய்துகொடுப்பதையும் காணலாம். 

ரூத் ஒரு பெண்ணாக இருந்த போதிலும் ஓர் அந்நிய பெண்ணாக இருந்தபோதிலும் இஸ்ராயேலர்களுடைய இடத்தில் இவருக்கு இடம் கிடைப்பதும் கடவுளுடைய கருணையே என நாம் பார்க்கிறோம். 

ரூத் 2:10ம் வசனத்தில் இதனை காணலாம். இவ்வாறாக கடவுளின் இரக்கம் அனைவருக்கும் உரியது என நாம் காண்கிறோம். புதிய ஏற்பாட்டிலும் உரோம நூற்றுவ தலைவனின் பணியாளன் மீது இயேசுவின் இரக்கம் காணப்பட்டது (லூக்கா 7:1-12). கானானிய பெண்மணியின் மீதும் இயேசுவுக்கு தயவு இருந்தது (மாற்கு 7:24-30). எனவே கடவுளின் இரக்கம் சாதி, சமய, எல்லை பேதங்கள் அனைத்தையும் கடந்ததாகும். 

2. கடவுளின் இரக்கம் ஓர் அறப்பண்பாகும்

திருப்பாடல் 145ல், “கடவுளிடம் காணப்படும் அறப்பண்புகளுக்காக கடவுளைப் போற்றுங்கள்” என ஆசிரியர் அழைக்கின்றார். சங்கீதம் 145:7-9ம் வசனம் வரையுள்ள பகுதியில் அவரின் நீதிப்பண்பு, இரக்கப்பண்பு போன்றவை என்றுமே நிலையானவைகள் என ஆசிரியர் கூறுகின்றார். இதனையே எபேசியர் 5:32ம் வசனத்தில் இருந்து வருகின்ற புதிய ஏற்பாட்டு பகுதியிலும் நாம் காணலாம். கடவுளிடம் காணப்படுகின்ற நற்பண்புகள் எம்மிடையேயும் குடிக்கொள்ள வேண்டும் என  ஆசிரியர் கூறுகிறார். 

கடவுள் சினமற்றவர், 

கோபமற்றவர், 

நன்மையை உருவாய் கொண்டவர்.

இதனைப் போன்று நாமும் எமது சகோதரர்களிடத்திலே கோபம் இல்லாமல், சினம் கொள்ளாமல் வாழ ஆசிரியர் அழைக்கின்றார். இதனையே இயேசு மத்தேயு 5:22-24ல், “நீ காணிக்கை கொண்டுவரும்போது உன் சகோதரன் பொருட்டு ஏதேனும் குறை உண்டு எனக் கருதினால் உன் காணிக்கையை பலிபீடத்தில் வைத்துவிட்டு அவரிடம் சென்று முதலில் ஒப்புரவாகு அல்லது உறவை புதுப்பித்துக் கொள்” என்பதை இயேசு காண்பிக்கின்றார். இதுவே மிகச் சிறந்த காணிக்கையாகவும் மிகச் சிறந்த நற்பண்பாகவும் இருக்கின்றது. 

3. கடவுளின் இரக்கம் எப்பொழுதும் ஆபத்தை நோக்கி வெளிப்படுத்தும் அழைப்பாகும்

நற்செய்தி பகுதியிலே மாற்கு 1:40-45 வரையுள்ள பகுதியில் கடவுளின் இரக்கம் அவரது மனிதப்பண்பு தொழுநோயாளி ஒருவரிடத்தில் இயேசு காண்பித்த இரக்கத்தை வெளிப்படுத்துகின்றது. சிறப்பாக மாற்கு நற்செய்தியாளர் இப்பகுதியை கையாளும்போது தொழுநோயாளர்கள் சமூகத்திலிருந்து புறம்பாக்கப்பட்டவர்கள் என நாம் அறிவோம். கிராமத்திற்குள் அவர்கள் வரும்போதும் “அசுத்தம், அசுத்தம்” எனக் கூறிக்கொண்டே வரவேண்டும். இப்படி மனித மாண்புகள் மறுக்கப்பட்ட மக்களாக இவர்கள் கருதப்பட்டனர். இவர்களின் நோயை விட சமுதாயத்தில் இவர்கள் அங்கீகரிக்கப்படாத நிலையே அதிக நோயாகக் காணப்பட்டது. 

இத்தகைய பின்னணியிலேயே ஆண்டவர் இயேசு தொழுநோய் உள்ளவர்களைத் தொடுகின்றார். தொடுதல் என்பது அங்கீகாரத்திற்கு உரியதாகும். இப்பேர்ப்பட்டவர்களை இயேசு தொடுவதன் ஊடாக அவருக்கு சரீர சுகத்தைவிட சமூகத்தில் வாழும் அங்கீகாரத்தை அளித்ததை நாம் காண்கின்றோம். இதன் மூலம் சமூகத்தின் ஓர் பிரதிநிதியாக இவர் வாழுகின்றார். கடவுளின் இரக்கம் தொடுதலின் ஊடாக அங்கீகாரத்தை இம்மனிதனுக்கு கொடுக்கின்றது. 

இன்று நாம் வாழுகின்ற சூழலிலும் சரீர நோயைவிட ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட சிந்தனைகள் பெரும் மன அழுத்தங்களை மக்களுக்குக் கொடுக்கின்றன. 

சாதியத்தினால் மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். தீண்டாமை என்னும் எண்ணக்கரு மிகப்பெரிய தொழுநோயாக சமூகத்தில் உருவெடுத்து வருகின்றது. எனவே இத்தகைய பின்னணியில் வாழும் மக்கள் சமூக குணப்படுத்தலை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். வெறுமனே சரீர குணப்படுத்தலை ஏற்படுத்த இயேசு இவ் உலகிற்கு வரவில்லை. 

மாறாக இயேசு சமூக குணப்படுத்தலையும் விதைத்திருந்தார். இத்தகைய பணியை நிறைவேற்றவே நாங்களும் இவ்வுலகிற்குள் அனுப்பப்பட்டுள்ளோம். 

முடிவுரை

கடவுளின் இரக்கக்குணம் எல்லோர் மேலும் காண்பிக்கப்படுகின்றது. திருப்பாடல் 123 அல்லது சங்கீதம் 123ல் தாவீது, “எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்” என கூறுகிறார். இங்கு இரக்கம் என்பது தகுதி அற்றவர்கள் மேல் கடவுள் காண்பிக்கும் அன்பை எடுத்துக் காண்பிக்கின்றது. எனவே, இந்த கடவுள் காண்பித்த இந்த அன்பை கடவுளால் அனுப்பப்பட்ட இயேசு பிறருடன் பகிர்ந்து கொண்டார். நற்பண்புகள் அனைத்தும் ஓர் அன்பின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தன. எனவே நாங்களும் கடவுள் இரக்கமுள்ளவர் என்பதை மற்றவர்களுக்கு எங்கள் இரக்கச் செயல்களினூடாக வெளிப்படுத்துவதே பெரிய அழைப்பாகும். அன்னைத் தெரேசா கூறுவது போல் “கடவுளுக்கு கரங்களும் கால்களும் இல்லை மாறாக, எங்கள் கரங்களும் எங்கள் கால்களும் எப்பொழுது கடவுளின் இரக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றதோ அப்பொழுதே கடவுள் இரக்கமுள்ளவர் என்பதை உலகத்தார் கண்டுகொள்வார்கள்.” எனவே இத்தகைய செயல் சார்ந்த பணியை உலகில் ஆற்ற நாம் அனைவரும் புறப்பட்டுச் செல்வோம்.  

ஆக்கம் 

அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்

Comments