"அனைவரையும் உள்வாங்கும் கடவுள்" (2 Mins Read)

அனைவரையும் உள்வாங்கும் கடவுள்

முன்னுரை



கடவுள் அனைவரையும் உள்வாங்குபவராக திருமறையிலே காட்டப்படுகின்றார். சிறப்பாக  அனைத்துலக மகளிர் தினத்தை நாங்கள் நினைந்துக் கொள்கின்றோம். இத்தினத்திலேயே இறைவன் பெண்களையும் உள்வாங்கும் கடவுள் என்பதை நாங்கள் நினைந்துகொள்கின்றோம்.

அவருடைய மீட்புத்திட்டத்தில் பெண்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். மத்தேயு 1:18-25 வசனம் வரையுள்ள பகுதியில் தாமார், ரூத், பத்சேபால், மரியாள், ராகாப் போன்ற பெண்கள் உள்வாங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

அனைவரும் உள்வாங்கும் கடவுள்

ஏசாயா இறைவாக்கினர் நூல் 56:1-8ல், கடவுள் அனைவரையும் உள்வாங்குபவராகக் காட்டப்படுகின்றார். குறிப்பாக ஏசாயா 56:7,8ம் வாக்கியங்களில் 

கடவுள்  ஆண்கள், பெண்கள், திருப்பணியாளர்கள், அண்ணகர்கள் போன்ற அனைவரையும் உள்வாங்குபவராகவும் அனைத்துப் பணிகளையும் உள்வாங்குபவராகவும் காட்டப்படுகின்றார். 

அவருடைய பார்வையில் நீதிப்பணி, அமைதிப்பணி, விடுவிக்கும் பணி போன்ற பல பணிகளில் ஈடுபடுபவர்கள் பேறுபெற்றவர்களாகவும் காட்டப்படுகின்றனர். இதே செய்தி சிறப்பாக திருப்பாடல் 15ம் திருப்பாடலிலும், மத்தேயு 5:1-12 வரையுள்ள பகுதியிலும் குறிப்பிட்டு காட்டப்படுகின்றது. 

இதற்கூடாக இறைவனின் பணி அனைவருக்குமுரியது, அனைவராலும் ஆற்றப்படுகின்றது என்ற கருத்தும் நிலைநாட்டப்படுகின்றது. அவர் தனது பணிக்காக புற இனத்தவரையும் பயன்படுத்துவார் (ஏசாயா 45:1). அவருடைய விடுதலைப்பணி அனைத்துலகத்திற்குமுரியது (ஆமோஸ் 9:7). 

இறைவனின் மீட்புத் திட்டம் அனைவருக்குமுரியது

சிறப்பாக திருப்பாடல் 86:7ல் பார்க்கும்போது கடவுள் எல்லோருடைய மன்றாடல்களுக்கும் பதிலளிப்பவராகக் காட்டப்படுகின்றார். குறிப்பாக லூக்கா 2:10ம் வாக்கியத்தில், கடவுள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நற்செய்தியை இவ்வுலகத்தோடு பகிர்ந்து கொண்டார். மேலும் மாற்கு எழுதிய நற்செய்தி 11:17ம் வாக்கியத்தில், இயேசு எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்துகின்ற வேளையில், “இதோ இவ் இல்லம் எல்லா மக்களுக்குமுரிய ஓர் மன்றாடலின் இல்லம். நீங்களோ இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என மக்களை இயேசு எச்சரிப்பதை நாம் காணலாம்.

 இதனைப் போன்று திருவெளிப்பாடு 7:14-17ம் வசனம் வரையுள்ள பகுதியில், விண்ணக விருந்திலே இணைந்துகொள்ளுகின்ற மக்களும் எல்லா இனம், கோத்திரம், குலம் எல்லாவற்றையும் கடந்த இறையரசின் மக்களாக இணைந்திருக்கின்றார்கள். இதனை திருவெளிப்பாடு 7:9ம் வசனம் கூறுகின்றது. எனவே சிறப்பாக இப்பகுதியிலே நீரோ மன்னன், தொமித்திய மன்னன் ஆகியவர்களால் பல துன்பங்களுக்கு உட்பட்டு கிறிஸ்தவர்கள் தமது சாட்சியத்துக்காக தமது உயிரை இழந்து காயப்பட்டு இருப்பதோடு எதிர்காலத்தில் துன்புறுத்தப்பட இருப்பவர்களையும் உள்வாங்கிய ஒரு பகுதியாகவே இது காணப்படுகின்றது. 

எனவே இங்கே இறையரசிலே எவ் வேறுபாடுகளும் இல்லை என்ற கருத்துதான் வலியுறுத்தப்படுகின்றது. 

இச்சிந்தனையை மத்தேயு 8:11லே ஆண்டவர் இயேசு முன்னதாகவே கூறியுள்ளார். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் மக்கள் ஒன்றாகக் கூடி வருவார்கள் என்று கூறப்படுகின்றது. எனவே இங்கே குறிப்பிடப்படும் இறையரசு ஆலயத்தை விட நிரந்தரமானது. சிறப்பாக திருவெளிப்பாடு 21:22ல், “நான் கோவிலைக் காணேன்” என யோவான் சாட்சியம் கூறுகிறார். நிலைத்திருப்பது திருச்சபைகள் அல்ல மாறாக ‘கடவுளுடைய அரசு’ என்ற கருத்து கூறப்படுகின்றது. இனி கவலைகள் இல்லை, கண்ணீர் இல்லை, துன்பம் இல்லை என்ற வாசகங்கள் திருவெளிப்பாடு 21:4ம் வசனத்திலும் கூறப்படுகின்றது. புதிய வானம் புதிய பூமியின் உருவாக்கத்தில் இவ் அனுபவங்கள் புலப்படும் எனக் கூறப்படுகின்றது. ஏசாயா 65:2-7ம் வசனம் வரையுள்ள பகுதியில், பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ராயேல் சமூகம் கண்டுகொள்ளும் கனவைப் போன்ற ஒரு பகுதியே இங்கும் வெளிப்படுத்தப்படுகின்றது.

கடவுளின் பார்வையில் பெண்களும் உள்வாங்கப்படுகின்றனர்

மத்தேயு எழுதிய நற்செய்தி 15:21-28 வரையுள்ள பகுதியை நாம் வாசிக்கும்போது ஆண்டவர் இயேசுவின் எல்லைக் கடந்த பணி விபரிக்கப்படுகின்றது. இங்கே கானானிய ஊரைச் சேர்ந்த பெண்மணி இயேசுவிடம் வருகிறார். இவர் தீரு சீதோன் போன்ற பகுதிகளிலிருந்து வருகின்ற ஓரு பெண்மணி. எனவே இயேசுவினுடைய தூதுப்பணி இப்பொழுது புற இனத்தவர்கள் எல்லைகளுக்குள்ளும் புகுந்து வருகின்றது. எனவே இந்த பெண்மணி ஒரு வேற்று இனத்தைச் சார்ந்தவராக இவர் கருதப்பட்டாலும் இயேசு இவரை உள்வாங்குவதை நாம் பார்க்கின்றோம். மேலும் இவர் ஒரு பெண்ணாக கருதப்படுகின்றார். 

யூதர்களைப் பொறுத்தவரையிலே யூத ரபி, “ஆண்டவரே நீர் என்னை நாயாகவும் பெண்ணாகவும் படைக்காதபடியால் உமக்கு நன்றி கூறுகின்றேன்” எனக் கூறுவார். இதிலிருந்து ஆணாதிக்க சமூகத்தின் விழுமியங்களை நாம் இங்கே காணலாம். ஆனால் ஆண்டவர் இயேசு அதற்கு அப்பாலும் சென்று அங்கே இப்பெண்ணின் புதல்வியை குணப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். 

மேலும் இப்;பகுதியிலே ஆண்டவர் இயேசு அதாவது இப் பெண்ணைப் பார்த்து 21ம் வாக்கியத்திலே, “அம்மா உனது விசுவாசம் அல்லது பற்றுறுதி பெரிது” எனக் கூறுகின்றார். சிறப்பாக பிறச் சமயத்தில் காணப்படும் நம்பிக்கையை ஆண்டவர் மெச்சுகின்றார். அவரின் பணி சமய எல்லைகளைக் கடந்து சென்று அவர்களிடம் காணப்படும் நற்பண்புகளை பாராட்டும் தன்மையை இங்கே காணலாம். இதனை லூக்கா 7:1-12 வரையுள்ள பகுதியில் இயேசு நூற்றுவத்தலைவரையும் அங்குள்ள மக்களையும் நோக்கி, “இஸ்ராயேலருக்குள்ளே இப்படிப்பட்ட நம்பிக்கையை நான் காணவில்லை” எனக் கூறுவதும் இயேசுவினுடைய பார்வையில் பிற சமயத்தில் காணப்படும் நற்பண்புகள் பாராட்டப்பட்டதை நாம் காணலாம். எனவே இவ் எல்லைகள் அனைத்தையும் இயேசு தாண்டுகின்றார். 

ஆண்டவர் இயேசு இங்கு புற இனத்தவர்களை இஸ்ராயேல் மக்கள் ‘நாய் குட்டிகள்’ என அழைத்தனர். இத்தகைய போங்கு தான் இப்பகுதியிலும் காணப்படுகின்றது. சிறப்பாக ஆண்டவர் இயேசு இவ்வாறு இம்மக்களை குறைந்த வார்த்தையினால் குறிப்பிட்டிருக்க முடியுமான என்பது எல்லாருடைய வினாவாகும். 

குறிப்பாக மத்தேயு 10:5ம் வாக்கியத்தில் பயன்படுத்தும் போது இயேசு தமது சீடர்களை நோக்கி, “சமாரியர்கள் வாழும் எல்லைகளுக்குள் போகவேண்டாம்” எனக் கூறுகின்றார். எனவே இவ்வாறு புறக்கணிப்புத் தன்மையுள்ள பதங்களை ஆண்டவர் இயேசு குறிப்பிட்டிருக்க முடியுமா இல்லையேல் மத்தேயுவைப் பொறுத்தவரையிலே ஒரு யூதனாக யூத கண்களோடு இந்த பகுதியை அவர் பார்த்திருக்கின்றாரா அல்லது எழுதி இருக்கின்றாரா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. ஏனெனில் இயேசு குறை கூறும் சமாரியர்களைப் பற்றி லூக்கா தன்னுடைய நற்செய்தியில் எழுதும்போது லூக்கா 10:25-37 வரையுள்ள பகுதியில், விழுந்துபோன யூதனுக்கு அவனை குணமாக்கும் பணியில் சமாரியனே ஈடுபட்டார் எனக் குறிப்பிடுகின்றார். லூக்கா 17ம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும், பத்துத் தொழுநோயாளர்கள் பகுதியில் சமாரியரே நன்றி செலுத்தும் பணியிலும் ஈடுபட்டார். 

எனவே இத்திருவார்த்தைகள் மத்தேயுவினுடைய இப்பெண்ணின் சம்பவத்தை வேறு பார்வையில் வாசிக்கவும் எங்களைத் தூண்டுகின்றது. எனினும் இப்பகுதியில் இயேசு பல்வேறுபட்ட எல்லைகளைக் கடந்து சென்றார். எல்லோரையும் உள்வாங்கினார் என்பதே உண்மையான திருவார்த்தையாகும்.

முடிவுரை

இன்றை 21ம் நூற்றாண்டில் எல்லோரையும் உள்வாங்குவது திருச்சபையினுடைய பணியாகும். எனவேதான் திருச்சபையை கத்தோலிக்கத் திருச்சபை என அழைக்கின்றோம். இதன்படி திருச்சபை எந்த ஒரு நாட்டிற்கோ, இனத்திற்கோ, கலாசாரத்திற்கோ, சமயத்திற்கோ கட்டுப்பட்டதல்ல. அது எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக உள்ளது. 

இதனையே திருத்தந்தை ஜோன் போல் 23 அவர்கள் திருச்சபையை நோக்கி,

 “உங்களுடைய ஜன்னல்களையும் கதவுகளையும் திறவுங்கள் அப்பொழுது புதிய காற்று உள்ளே வீசும்” 

என்று கூறுவதன் ஊடாக திருச்சபை எல்லோரையும் உள்வாங்க வேண்டும் என்பதையே கடவுள் திட்டம் என்பதை அவர் கூறுகின்றார். 

மேலும் இந்த உள்வாங்கும் நோக்குடனே திருத்தூதர்கள் 15ம் அதிகாரத்தில் திருச்சபை ஒருவர் கிறிஸ்தவராக விரும்பினால் யூதனாக வேண்டிய தேவை அல்ல, மீட்பு கடவுளின் அருளாலே கிடைக்கின்றது என்ற திறந்த மனதுடன் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்ததை நாம் மறந்துவிட முடியாது. எல்லோரையும் அரவணைக்கும் கடவுள் எல்லோரையும் உள்வாங்கும் படி எம்மை அழைக்கின்றார். அந்த பாரிய சவால் நிறைந்த குரலுக்கு செவி கொடுப்போமாக.

ஆக்கம் 

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர் 

Comments