"Call to be Liberative"- (2Mins Read)

நாம் அழைக்கப்பட்டிருப்பது விடுதலை வழங்கவே

முன்னுரை

விடுதலை என்னும் உணர்வு இன்று எல்லா இடங்களிலும் பேசப்படுகின்றது. ஏனென்றால் ஒடுக்குமுறை எல்லா பகுதிகளுக்குள்ளும் மலிந்து காணப்படுகின்றது. பால் சார்ந்த ரீதியில், வயது சார்ந்த ரீதியில், இனம், சமயம் சார்ந்த ரீதியில் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையிலேயே இன்றைய தலைப்பு ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை கொடுக்க எங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. 

ஏனெனில் கடவுள் விடுதலையை வழங்குகின்றார் (விடுதலைப்பயணம் 3:7). இப்பணியை செய்வதற்காகவே இயேசுவை அனுப்பியுள்ளார் (லூக்கா 4:16-22). திருச்சபையும் இப்பணியை ஆற்றவே அனுப்பப்பட்டுள்ளது (திருத்தூதுவர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 13:1-3).

வழிபாட்டில் விடுதலை

வழிபாடு என்பது கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் தனிமனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையாலோ அல்லது செயலாலோ வழங்குவதே வழிபாடு ஆகும். இவ்வழிபாடு விடுதலை சார்ந்த உணர்வுடன் கடவுளுடனும் மக்களுடனும் இணைந்து நடாத்தப்பட வேண்டிய ஒன்றாகும். பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு முன்னர் வாழ்ந்த ஏசாயா இறைவாக்கினர் 2:12-17ம் வசனம் வரையுள்ள பகுதியில் இவ்வழிபாட்டில் காணப்படும் ஒடுக்குமுறை சார்ந்த சிந்தனைகளை கண்டித்து இது விடுதலை உணர்வை வழங்கக்கூடிய வகையில் வழிபாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என சொல்லுகின்றார். 

ஒடுக்கப்பட்டவர்கள், நீதி மறுக்கப்பட்டவர்கள், உண்மை மறுக்கப்பட்டவர்கள் இவர்கள் விடுதலையாக்கப்பட வேண்டும் என கூறுகின்றார். இக்கருத்தினையே ஆமோஸ் 5:18-21 வரையுள்ள பகுதியும் எமக்குக் காண்பிக்கின்றது. ஏழைகள் விடுதலையாக்கப்படல் (ஆமோஸ் 2:6), பெண்கள் விடுதலையாக்கப்படல் (ஆமோஸ் 4:1), சமயம் முரண்பாடுகள் விடுதலையாக்கப்பட்டு கடவுள் அனைத்துலக கடவுள் என்ற சிந்தனை உருவாக்கப்படல் (ஆமோஸ் 9:7) போன்ற பகுதிகள் இதில் உள்வாங்கப்படுகின்றன. 

ஆமோஸ் நூலை பற்றிய சில தகவல்கள்

ஆமோஸ் இறைவாக்கு உரைத்த காலமும் பின்னணியமும்

ஆமோஸ் என்னும் பெயர் மூல எபிரேயத்தில் עמוס என்று அழைக்கப்படுகிறது. இப்பெயரின் பொருள் சுமை சுமப்பவர் என்பதாகும்.

ஆமோஸ் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைவாக்காளர்; அவர் யூதாவின் தெக்கோவா (Tekoa) என்ற ஊரில் பிறந்த மேய்ப்பனும் அத்திப்பழ மர வளர்ப்பவருமாக இருந்தார். இஸ்ரவேலில் எரொபவாம் II (Jeroboam II) அரசனும், யூதாவில் உசியா (Uzziah) அரசனும் ஆட்சி செய்த (கி.மு. சுமார் 760–750) காலத்தில் இவர் இறைவாக்கு உரைத்தார்.

ஆமோசின் செய்தி :

  • க் காலத்தில் இஸ்ரவேல் நாட்டில் பொருளாதார வளம் இருந்தாலும் ஏழைகள் சுரண்டப்பட்டனர்; இதை ஆமோஸ் (2:6) கடுமையாக கண்டித்தார்.
  • சமூக அநீதியை கண்டித்து “பணக்காரர்கள் ஏழைகளை விற்கிறார்கள்” என்று அவர் தீர்க்கதரிசித்தார்.
  • ஆமோஸ் 4:1-இல் சமூக அநீதியில் ஈடுபட்ட பெண்களை “பாஷானின் பசுக்கள்” என்று விமர்சித்து, பெண்களும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கூறுகிறார்
  • ஆமோஸ் 9:7-இல் இறைவன் இஸ்ரவேலின் மட்டுமல்ல, அனைத்து ஜாதிகளின் கடவுள் என்பதைக் கூறி ஒரு அனைத்துலக தெய்வக் கருத்தை முன்வைக்கிறார்.
  • ஆகவே, ஆமோஸ் ஒரு மேய்ப்பனாக இருந்தாலும் சமூக நீதி, ஏழைகளின் விடுதலை, அனைத்துலக கடவுள் என்ற சிந்தனை ஆகியவற்றை வலியுறுத்திய தீர்க்கதரிசியாக அறியப்படுகிறார்.

ஆமோஸ் காலகட்டத்தைப் பற்றிய சில தொல்பொருள் ஆதாரங்கள்:

கி.மு. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Tel Dan Stele மற்றும் Mesha Stele போன்ற கல்வெட்டுகள் அந்தக் கால அரசியல் சூழலை உறுதிப்படுத்துகின்றன.


Tel Dan Stele

Mesha Stele

Samaria Ostraca (சமாரியா மண் ஓலைப்பலகைகள்) அந்த காலத்தின் செல்வச் சமூக அமைப்பையும் வரி முறையையும் காட்டுகின்றன.

                                                                    Samaria Ostraca

Lachish Ostraca (லாகீஷ் ஒஸ்த்ராகா என்பது களிமண் பானைகளின் உடைந்த துண்டுகளில் எழுதப்பட்ட பழமையான எபிரேய எழுத்து குறிப்புகள் ஆகும்) இது போன்ற கண்டுபிடிப்புகள் யூதா-இஸ்ரவேல் சமூக மற்றும் நிர்வாக அமைப்புகளை வெளிப்படுத்துகின்றன.


Lachish Ostraca   

சமூக வாழ்வில் விடுதலை

எபேசிய திருச்சபைக்கு பவுல் எழுதிய கடிதத்தில் 6:5-9 வரையுள்ள பகுதியில் அக்காலத்தில் நிலவிய மானிட அடிமைத்தனத்தைப் பற்றி பவுல் பேசுகின்றார். உரோம கலாசாரத்தில் அடிமைகள் மக்களுக்கு விற்கப்பட்டனர். இவர்களை எஜமான்கள் அல்லது முதலாளிகள் வாங்கினார்கள். வாங்கி தமது இல்லத்தின் தொழிற்சாலைகளின் கடமைகளுக்காகப் பயன்படுத்தினர். ஆனால் இவர்களை பல்வேறு வழிகளிலே ஒடுக்கி இருந்தார்கள். இச்சிந்தனையை பவுல் நிராகரித்து அடிமைகளுக்கும் முதலாளிகளுக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான தலைவர் உண்டு அவரே கடவுள் எனக் காட்டி ஒடுக்குமுறை சிந்தனைகளை அகற்றி நீங்கள் இருவருமாக திருப்பணி ஆற்ற அவர் திருப்பணி ஆற்ற வேண்டும் என ஆலோசனை கூறுகிறார். 

எனவே பணி மையத்தில் அடிமையும் முதலாளியும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தையே அவர் வலியுறுத்துகின்றார். இதனையே உரோமையர் 3:23ம் வாக்கியத்துள்ள பகுதியில், யூதர்களையும் புற இனத்தவர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் எல்லோரும் தவறிழைத்து இறைமாட்சியை இழந்துள்ளோம் என அவர் கூறுகின்றார். இவ்வாறு மக்களை பொது மேடைக்கு அழைத்து அதற்கூடாக ஒடுக்குமுறையை அகற்ற அவர் விரும்புகின்றார். 

பால்சார்ந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை

லூக்கா நற்செய்தியாளன் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை அவருடைய நற்செய்திகளிலே நாம் காணலாம். 

இயேசுவின் பிறப்பில் எலிசபெத்தைக் காண்பிக்கிறார் (லூக்கா 1:39-45). இயேசு கொண்டு வரவிருக்கின்ற புரட்சியைப் பற்றி மரியாளின் கீதத்தினூடாக வடிக்கின்றார் (லூக்கா 1:46-56). இயேசுவின் வருகைக்காக காத்திருந்த பானுவேலின் குமாரத்தியாகிய அன்னாளைப் பற்றி பேசுகின்றார் (லூக்கா 2:30-36). மேலும், அவருடைய பணியில் பெண் சீடர்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் (லூக்கா 8:1-3). அத்துடன் இயேசுவின் போதனைகளை அவர் பாதத்தருகே உட்கார்ந்திருந்த மரியாளையும் அவருக்கு விருந்தோம்பலளித்த மார்த்தாளையும் காண்பிக்கின்றார் (லூக்கா 10:38-42). ஈற்றில் அவருடைய சிலுவைக்கருகில் சுற்றி வளைத்திருந்த பெண்களையும் காண்பிக்க மறக்கவில்லை (லூக்கா 23:33-47). 

இப்பகுதியில் லூக்கா 13:10-17ல் பல வருடங்களாக அடிமைப்படுத்தும் ஒரு ஆவியைக் கொண்டிருந்த கூன் விழுந்த ஒரு பெண்மணியை இயேசு குணப்படுத்துவதை நாம் காண்கின்றோம். இங்கு பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்குள் உட்பட்டிருந்த யூத சமுதாயம் குணப்படுகின்றதையும் நாம் மறந்துவிட முடியாது. சிறப்பாக இப்புதுமை ஓய்வுநாளில் இடம்பெறுகின்றது. யூதர்களைப் பொறுத்தவரையில் ஓய்வுநாளில் நன்மை செய்ய அவர்களுக்கு விருப்பமற்றிருந்தது. எத்தொழில்களிலும் ஈடுபடமாட்டார்கள். இப்பின்னணியிலேயே இயேசு ஓய்வுநாளில் இப்புதுமையை ஆற்றி ஓய்வுநாளுக்கும் அவர் ஆண்டவர் என்ற கருத்தை அவர் விதைக்கின்றார். இதனையே மாற்கு 3:1-6 வரையான பகுதியிலும் நாம் காணலாம். எனவே அடிமைத்தனச் சட்டம் உடைக்கப்பட்டு இங்கு விடுதலைச் சட்டம் பிறக்கின்றது. 

மேலும் இக்கூன் விழுந்த பெண்மணியை பொறுத்தவரையிலே இவர் ஓர் பெண்ணாக இருந்தாள். யூத சமுதாயத்தில் பெண்கள் இரண்டாம் தர பிரஜைகளாகக் கருதப்பட்டனர். இவர்களை பொதுவாக ஆலயத்திற்குள் சேர்ப்பதும் இல்லை. இப்பேர்ப்பட்ட ஒரு பின்னணியிலேயேதான் இப்பெண்ணை நாம் காண்கிறோம். எனவே இப்பெண்ணுக்குக் காணப்பட்ட அடிமைத்தனச் சட்டங்களும் உடைகின்றன. யூதரைப் பொறுத்தவரையிலே பெண்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவும் நாய்களாகவும் கருதப்பட்டனர். கிரேக்கர்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் ஒரு இன்பப் பொருட்கள். உரோமர்களைப் பொறுத்தவரையிலே பெண்கள் உரிமை மறுக்கப்பட்ட சொத்துக்கள் என்றே கருதப்பட்டனர். இப்பேர்ப்பட்ட பின்னணியில் இயேசு ஆற்றிய புதுமையின் பின்னணி ஒரு மிகப் பெரிய ஒரு விடுதலை செய்தியை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. மேலும் நிறைவிலே இப்பெண்மணி ஆபிரகாமின் குமாரத்தி என அழைக்கப்படுகின்றார். யூதர்களைப் பொறுத்தவரையிலே ஆபிரகாமுடைய பெயர்களை அவர்கள் யாருக்கும் வழங்குவதில்லை. 

இங்கு லூக்கா நற்செய்தியாளனே ஆபிரகாமை புற இனத்தவர்களோடும், ஏழைகளோடும், பெண்களோடும் அடையாளப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். இங்கு இப்பெண்மணிக்கு ஆபிரகாமின் குமாரத்தி என்ற பெயர் கொடுக்கப்பட்டதும் மிகப் பெரிய ஒரு விடுதலைச் செய்தி ஆகும்.  இச் செய்தியை லூக்கா 19:1-10ல் மறுபடியும் சகேயுவுக்கும் ஆபிரகாமின் குமாரன் என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. மேலும் செல்வந்தன் லாசரு மாதிரிக் கதையில் ஆபிரகாமின் மடியில் லாசரு உறங்கிக் கொண்டிருந்ததை லூக்கா கூற மறுக்கவில்லை. எனவே பல கோணங்களில் இவ் அடிமைத்தனங்களிலிருந்து விடுதலையை இயேசு வழங்குகின்றார். 

முடிவுரை

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே கிறிஸ்து பல விடுதலைகளை எமக்கு அளிக்க விரும்புகின்றார். கலாத்தியர் 3:28லே ஆண் என்றும் இல்லை, பெண் என்றும் இல்லை, அடிமை என்றும் இல்லை, சுயாதீனன் என்றும் இல்லை, கிரேக்கன் என்றும் இல்லை, யூதன் என்றும் இல்லை எல்லா குழு உணர்வுகளிலிருந்தும் அவர் விடுதலையைக் கொடுக்க வல்லவராயிருக்கின்றார். மேலும் பிரிந்த நின்ற மக்களை ஒருமைப்படுத்துவதன் ஊடாக விடுதலையின் செய்தி பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இதனை எபேசியர் 2:14-18 வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். 

எனவே இந்த விடுதலைப் பணியை நாம் விரைந்து சென்று அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கின்ற மக்களை விடுதலை அளிக்க கடவுள் தமது தூய ஆவியானவரின் வல்லமையை அருளுவாராக. எங்கே ஆவியானவர் உண்டோ அங்கே விடுதலை உண்டு. ஆமேன்.

ஆக்கம் 

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்


Comments