"Cross - Manifestation of Grace" (3 Mins Read)

Cross - Manifestation of Grace


முன்னுரை

மனித வாழ்வில் பாடுகள் அல்லது துன்பங்கள் பல வழிகளில் ஏற்படுகின்றது. தனிநபர்களாக, சமூகங்களாக நாம் துன்பங்களை அனுபவிக்கின்றோம். இவைகள் வார்த்தையாலோ, செயல் வடிவிலோ, வன்முறைகளாகவோ மாறுவதை நாம் அவதானிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் எமது தவறுகளால் நாம் பாடுகளை அனுபவிக்கின்றோம். இன்னும் பல சந்தர்ப்பங்களில் எங்களுடைய தவறுகளுக்கும் தண்டனைகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதில்லை. இதனை சமூகப்பாவம் என அழைக்கின்றோம். மேலும் பல சந்தர்ப்பங்களில் தனிநபர்களாக மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் துன்பங்களை தெரிந்தெடுக்கின்றோம். இதனை சிலுவையினொளியில் நாம் பார்க்கின்றோம். நிறைவாக சில சந்தர்ப்பங்களில் எதிர்கால மாட்சிமைக்காக நிகழ்கால துன்பங்கள் காணப்படுகின்றன என்பதை நாம் எண்ணுகின்றோம். இதனொளியில் ஆண்டவர் இயேசு தனது எருசலேமை நோக்கிய பயணத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வையே இங்கு பார்க்க இருக்கின்றோம்.

இயேசுவைக் குறித்த மானிடர்களின் புரிந்துணர்வு

அன்றுபோல் இன்றுவரை இயேசுவைக் குறித்து பல புரிந்துணர்வுகள் காணப்படுகின்றன. அவருடைய தன்மை, செயற்பாடு போன்றவற்றை மையப்படுத்தியே இப்புரிந்துணர்வுகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற சில பட்டப்பெயர்கள் பற்றி பார்க்கும்போது அவரை அபிஷேகம் செய்யப்பட்டவர் அல்லது மெசியா என லூக்கா 9:18-21ம் வசனம் வரை நாம் காணலாம். அவர் ‘கடவுளின் மகன்’ என மாற்கு 1:1லும், துன்பப்படுகின்ற மக்களுடன் தன்னை அடையாளப்படுத்தும் ஓர் சேவையாளனாகிய ‘மானிடமகன்’ என மாற்கு 10:45 வரையுள்ள பகுதிகளிலும் நாம் காணலாம். மேலும் இயற்கையுடன் இணைந்த சில பட்டப்பெயர்களாக அவரை ‘ஒளி’ என யோவான் 8:12லும், அவர் ‘வழி’, ‘உண்மை’, ‘வாழ்வு’ என யோவான் 14:6லும், ‘தண்ணீர்’ என யோவான் 4:7லும் கூறப்படுவதை நாம் காண்கின்றோம். மேய்ப்புத்துவ பெயர்களான ‘ஆட்டுக்குட்டி’ (யோவான் 1:35), ‘மேய்ப்பன்’ (யோவான் 10:1-10) போன்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கே பார்வையற்ற மனிதனாகிய பர்திமேயு என அழைக்கப்படுகின்ற திதிமுவின் குமாரன் இயேசுவை ‘தாவீதின் மகன்’ என அழைப்பதை நாம் காணலாம். 

மாற்கு நற்செய்தியாளன் ஓர் வரலாற்று வாய்மை நிறைந்தவர். சிறப்பாக திருமறையில் பல பார்வையற்ற மனிதர்களைக் குறித்துக் குறிப்பிடப்படுகின்றது. யோவான் 9:1-3ல் பிறவியில் பார்வையற்ற ஒருவர், மாற்கு 8:22,26ல் இன்னுமோர் பார்வையற்ற மனிதன் போன்றவர்கள் குறிப்பிடப்படும்போது, இங்கு மாற்கு 10:46-52 வரையுள்ள பகுதியில் பர்திமேயு என்ற பார்வையற்றவனின் பெயர் மாத்திரம் குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் இது ஓர் வரலாற்று நிகழ்வு என்பதை எம்மால் உணரக்கூடியதாக இருக்கின்றது. இங்கு பர்திமேயு இயேசுவை ‘தாவீதின் மகன்’ என்று அழைப்பதன் பிரதான நோக்கம் தாவீதினால் அக்காலத்திலே அங்கவீனர்களாக காணப்பட்ட மக்களுக்கு எதிராக தாவீதினுடைய செயற்பாட்டினால் தங்களுக்கு ஏற்பட்ட அநீதி அகன்று ஆலயத்திற்குள் செல்லும் அங்கீகாரத்தை மறுபடியும் தங்களுக்குத் தரவேண்டும் என்ற ஒரு தோழமை மிக்க அங்கீகாரம் மிக்க ஓர் குரலாகும். இதனை 2 சாமுவேல் 5ம் அதிகாரத்தில் நாம் காணலாம். எனவே இயேசுவின் புதுமைகள் வெறுமனே இரக்கச்செயல்கள் அல்ல. மாறாக மனித வாழ்வின் அங்கீகாரத்தை எடுத்துக் கூறும் செயல்கள் என்பதையும் நாம் உணரலாம். மாற்கு 1:10-45ல் இயேசு தொழுநோயாளி ஒருவரை தொட்டு குணமாக்கியதும் அவன் சமூகத்தில் சென்று வாழ்வதற்கான ஒரு அங்கீகார செயற்பாடு என்பதை நாம் அறிந்துவிட முடியாது. 

பெயர் சொல்லி அழைக்கும் ஆண்டவர்

ஒரு மனிதனின் அடையாளமாக பெயர் காணப்படுவதை நாம் காணலாம். பெயர் ஓர் மனிதனின் செயற்பாடு அவருடைய அடையாளம் போன்றவற்றை எடுத்துக்கூறுவதை நாம் காண்கின்றோம். இங்கே பலர் அவனை அதட்டிய போதிலும் பர்திமேயு இயேசுவினிடத்திலே வருகின்றார். பெயர் சொல்லி அழைக்கும் ஆண்டவரின் பண்பை நாம் இங்கு காணலாம். இதனையே திருமறையிலே நாங்கள் யோவான் நற்செய்தி 20:16ம் வாக்கியத்திலே மகதலேனா மரியாள் இயேசுவை “ரபூனி” என்று அழைக்கும்பொழுது இயேசு அவளை “மரியா” என்று அழைக்கின்றார். இதனூடாக இருவருக்குமிடையிலான அந்த இணைப்புப் பாலமாக பெயர் இருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனாலேயோ மாற்கு பர்திமேயு என்ற பெயரை இங்கு குறிப்பிடுகின்றார் என்று நாங்கள் எண்ணிக்கொள்ளலாம். எனவே கடவுள் லூக்கா 2:38-42 வரையுள்ள பகுதியிலும் “மரியாளே, மரியாளே” என அழைக்கின்றார். மேலும், திருத்தூதர்பணிகள் 9:1-20 வரையுள்ள பகுதியிலும் “சவுலே, சவுலே” என அழைக்கின்றார். இவ் அழைப்பு வரலாற்றிலே இன்று தொடருகின்ற ஒரு அழைப்பாக காணப்படுகின்றது. 

இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு

இயேசு பர்திமேயுவைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும்?” என கேட்கிறார். மாற்கு 10:51. அவன் தெளிவாக தான் “பார்வையடைய வேண்டும்” என அறிக்கையிடுகின்றார். மேலும் அவன் பார்வையடைந்தவுடன் இயேசுவைப் பின்பற்றிச் செல்வதை நாம் காண்கின்றோம். இதனை மாற்கு 10:52லே நாம் காண்கின்றோம். இயேசுவைப் பின்பற்றிய அநேகர் இப்படியான அனுபவத்தைப் பெறுகின்றனர். ஆடைகளை எல்லாவற்றையும் எறிந்து விட்டு, அவன் இயேசுவைப் பின்பற்றுகிறான். இதனை மத்தேயு நற்செய்தி 4:20ம் வசனத்தில், சீடர்கள் தங்கள்; வலைகளை வி;ட்டு விட்டு பின்பற்றியதை நாம் காணலாம். மேலும் லூக்கா 5:11ம் வசனத்தில் பேதுருவும் அவரைச் சார்ந்தவர்களும் படகுகளை விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். அத்துடன் லூக்கா 5:28லே மத்தேயுவும் எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றினார். எனவே இயேசுவிடம் அழைப்புப் பெற்ற சீடர்கள் பற்றிக்கொள்ள வேண்டியது எது? விட்டுவிட வேண்டியது எது? என்பதைக்; குறித்த தெளிவான திட்டம் காணப்பட்டது. எனவே இவ் அழைப்பு ஒரு சலுக்கைக்காக அல்ல, ஓர் பொறுப்பு நிறைந்த அழைப்பு என்பதும் இதிலிருந்து உணரப்படுகின்றது. எனவே பர்த்திமேயுவின் அழைப்பு ஒரு சீடத்துவ அழைப்பாகும். ஆண்டவர் இயேசு எருசலேமுக்குச் செல்லுகின்ற இந்த பயணத்திலே இச் சம்பவம் இருக்கின்றது. எனவே பர்த்திமேயுவும் கூட இயேசுவை எருசலேமை நோக்கிய அந்த பயணத்தில் இயேசுவுடன் இணைந்து பிரயாணிக்கும் உன்னத அழைப்பைப் பெறுகின்றார். இது பாடுபடுவதற்கான ஒரு அழைப்பாகும்.                                                                     


முடிவுரை

ஆண்டவர் இயேசு தமது சீடர்களை அழைக்கும்போது சலுகைக்காக அல்ல,
பொறுப்புமிக்க சீடத்துவத்திற்கான அழைப்பையே அவர் கொடுக்கின்றார். அவ்வழைப்பு பாடுகள் நிறைந்த அழைப்பாகும். மாற்கு 10:35-45 வரையுள்ள பகுதியில், செபதேயுவின் குமாரர்கள் இயேசுவிடம் வந்து வலது புறமும் இடது புறமும் இருக்கும் மாட்சிமையை கேட்ட போது ஆண்டவர் இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிக்கவும் நான் பெறுகின்ற திருமுழுக்கை நீங்களும் பெற உங்களால் முடியுமா?” எனக் கேட்கின்றார். எனவே இங்கு இது இரத்தத்தினால் ஆகிய திருவிருந்தையும் திருமுழுக்கையுமே எடுத்துக் காண்பிக்கின்றது. இதுவே ஆபத்து மிக்க சீடத்துவம் ஆகும். அதாவது நாம் தண்ணீரால் திருமுழுக்கு பெறுவதைவிட இரத்தத்தினாலாகிய திருமுழுக்கினை பெறுதல் அவசியம். அதனையே யாக்கோபு கி.மு.42ம் ஆண்டு ஏரோதுவின் வாளினால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டான் என்பதை திருத்தூதுவர்பணிகள் 12ம் அதிகாரத்தில் நாம் படிக்கலாம். எனவே இயேசுவோடு கூட ஒன்றித்து பிரயாணிப்பது என்பது சீடத்துவத்திற்காகவும் இரத்தம் சிந்துதலுக்கான அனுபவமாகும். இதனையே பர்திமேயுவும் பெற்றுக் கொண்டான். இதனையே இந்த தவக்காலத்தில் இவ் அனுபவத்திற்கூடாக நாமும் இணைந்து இயேசுவுடன் பிரயாணிக்க கடவுள் எங்களுக்கு அருளை அளிப்பாராக. 

ஆக்கம் 

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்

Comments