CROSS : MANIFESTATION OF GRACE
சிலுவை : அருளின் வெளிப்பாடு
# திருமறைப் பகுதிகள்:
மீகா 7 : 15 - 20
1
பேதுரு 2 : 17 - 24
மாற்கு 10 : 46 - 52
திருப்பாடல்கள் 31
# உட்புகும் முன்:
சிலுவை ஓர் அடையாளம்,
# வெற்றியின் அடையாளம்,
# அச்சத்தை வென்றவர்களின் குறியீடு,
# இறை நீதிக்காக பாடுபடுபவர்களின் சிம்மாசனம்,
# இறை வழியில் பயணிப்பவர்களுக்கான பாதை,
# இறை ஆட்சிக்குரிய பரிசு,
# இறை மக்களுக்கான அங்கீகாரம்,
சிலுவையைப் பற்றிய பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். பாடியும் இருக்கின்றோம். சிலுவையைப் பற்றிய பாடல்களைப் பாடும் பொழுதெல்லாம் நம்முடைய மனதில் ஏதோ ஒரு நெருடலும், பயமும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நம்முடைய வாழ்வில் வந்து போகும்.
அருள்பணி. ராஜசேகரன் ஐயர் அவர்கள் எழுதிய சிலுவையைப் பற்றிய பாடல், நமக்கு ஒரு புதிய புரிதலை கொண்டு வருகிறது, நமக்குள் ஊட்டுகிறது. அவர் எழுதிய பாடலின் துவக்க வரிகள் இவ்வாறு சொல்லுகின்றன...
"நிமிர்ந்து நிக்குது சிலுவை கல்வாரி மேட்டுல ..
மனத்துணிவை தந்தது எனக்குள்
தினம் வாழும் வாழ்வில...
நிமிர்ந்து நின்னா வானம் கையளவு ...
துணிந்து நின்னா கடலும் கடுகளவு..."
சிலுவையை பார்க்கும் பொழுதெல்லாம் அது நமக்குள்
🍎மனத் துணிவை தருகிறது,
🍎பாடுபடும் வாஞ்சையை ஊட்டுகிறது,
🍎சிலுவையின் வழியில் பயணிக்க நம்மை உந்துகிறது,
🍎பாடுபடும் தாசராக நம்மை உருவாக்குகிறது.
ஒவ்வொரு வருடமும் தபசு காலங்களில் சிலுவை பற்றி சிந்திக்கும் பொளுதெல்லாம், நாம் சிந்தித்து முடங்கி விடுவது நல்லதல்ல மாறாக முன்னேறி செல்வதும், சிலுவையை சுமக்க நம்மை அர்ப்பணிப்பதும், சிலுவையின் வழியில் கடவுள் அருளின அன்பை நமது சொல், செயல், பணி, சேவை, சான்று வழியாக எடுத்துரைப்பதும் கடமையாகும்.
கடவுளின் அன்பிற்கு எல்லைகள் இல்லை, அதன் நீளம், அகலம், ஆழம், உயரம் எவ்வளவு என்பதை ஒருவராலும் அறிய முடியாது. அதேசமயம் கடவுளின் அன்பை பெறாதவர்கள் ஒருவரும் கிடையாது என்று அறுதி இட்டுச் சொல்லலாம்.
கடவுளுக்கு பல பெயர்கள் திருமறையில் இருந்தாலும், அதில் ஒன்றே ஒன்று கடவுளின் அன்பையும் அருளையும் நமக்கு விளக்கிக் காட்டுகின்றது அது என்னவென்றால் "பாடுபடும் தாசன்."
கடவுளின் பண்பு நலன்களில் ஒன்று அவர் கண்டும் காணாதவர் போல் இருப்பவர் அல்ல, தன்னை மறைத்துக் கொண்டு வாழ்பவரும் அல்ல, மாறாக துன்புறுகின்ற மாந்தரோடு தன்னையும் இணைத்துக் கொண்டு, துன்புறும் தாசராக, துன்புறும் வழியில் பயணித்து விடுவிக்கும் கடவுள் என்பதே இறையியல் ஆகும்.
வனாந்தரத்தில் முட்செடியில் மோசேவுக்கு தன்னை வெளிப்படுத்திய கடவுள், அழுகின்றவராக, துயருறுகின்றவராக, தன் மக்களின் வேதனைகளில் பங்கெடுக்கின்றவராக, அவர்களை விடுவிக்க சித்தம் கொண்டவராக தன்னை முழுவதுமாக வெளிப்படுத்துகின்றார்.
கடவுள் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்பதை சிலுவையின் வழியில் தன்னை ஒப்புக்கொடுத்து மீட்டெடுத்த இயேசு கிறிஸ்துவின் வழியாக அறிந்து கொள்ளலாம்.
சிலுவையின் வழியாக தமது உயிரை ஈந்து அளித்த இயேசு கிறிஸ்துவின் வழியாக கடவுளின் அருளையும் அன்பையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
1. கடவுளின் மனதுருக்கத்தை வெளிப்படுத்தும் சிலுவை.(மீகா 7 : 15 - 20 )
மனதுருக்கம் கடவுளின் மிகச்சிறந்த பண்புகளில் ஒன்றாகும். கடவுள் மனுக் குடும்பத்தின் மீது கொண்டிருக்கின்ற மனதுருக்கத்தை திருமறை பல இடங்களில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது.
யாத்திராகமம் 3ஆம் அதிகாரத்தில் எரிகின்ற முட்செடியை இயேசுவின் சிலுவை பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். எரிந்து கொண்டிருக்கிற முட்செடி கடவுளின்மனதுருக்கத்தையும் தம் மக்கள் மீது கொண்டிருந்த பரிவு இறக்கம் போன்றவற்றை எடுத்துக்காட்டுகிறது.
கொடுக்கப்பட்டுள்ள திருமறை பகுதியில் மீகா தீர்க்கதரிசி தம் மக்களுக்கு இறைவாக்கு உரைக்கின்றார். அந்த இறை வாக்கில் கடவுளின் மனதுருக்கத்தை மிகத் தெளிவாக காணலாம். அதோடு மட்டுமல்ல கடவுளின் அருளையும் அதில் காணலாம்.
"உன்னை அதிசயங்களை காண பண்ணுவேன்" (V. 15)
என்கின்ற இறைவாக்கு இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் அருளின வாக்குத்தத்தம் ஆகும்.
கடவுள் தம் மக்களுக்கு எதிராக செயல்படுகின்ற, அநீதி இழைப் போருக்கு எதிரான கடவுளின் தண்டனையை திருமறைப் பகுதி வெளிப்படுத்துகிறது.(V. 16 -17)
தம் மக்களுக்கு எதிராக வாழ்வோருக்கு கடவுள் கொடுக்கப் போகும் தண்டனை தம் மக்கள் மீது கொண்டிருக்கின்ற மனதுருக்கத்தின் வெளிப்பாடாக நாம் பார்க்கலாம்.
அதே சமயம் தம் மக்களுக்கு கடவுள் அருளின வாக்குத்தத்தங்கள் கடவுளின் மனதுருக்கம் மற்றும் அருளின அருளினை வெளிப்படுத்துகிறது.
கடவுளின் அருள் எவ்வாறு இருக்கிறது என்பதை மீகா தீர்க்கதரிசி மிகவும் அழகாக எடுத்துக்காட்டுகின்றார். "அக்கிரமத்தை பொறுத்துக் கொள்கின்றார், மீறுதல்களை மன்னிக்கின்றார், தம் மக்கள் மீது என்றைக்கும் கோபம் கொண்டீரார்"(V. 18)
கடவுள் தம் மக்கள் மீது கொண்டிருக்கின்ற அன்பு, இரக்கம் இவற்றுக்கு எல்லைகள் இல்லை என்பதை வலியுறுத்தி கூறுகின்றார்.
"அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்"(V. 19) கடவுளின் இவ்வார்த்தைகள் தம் மக்கள் மீது கொண்டிருந்த மனதுருக்கத்தோடு கூடிய அன்பையும் அருளையும் காட்டுகிறது.
பாடுபடும் தாசனாக தம்மை வெளிப்படுத்துகின்ற கடவுள், மீகா தீர்க்கதரிசியின் மூலமாக தம்முடைய மக்கள் மீது கொண்டிருந்த மனதுருக்கம் மற்றும் அருளையும் தம் வார்த்தைகளோடு வெளிப்படுத்துகின்றார்.
பொது மன்னிப்பு என்பது இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் அருளின மாபெரும் அருட்கொடையாகும். இதை அருளின கடவுள் துன்புரும் மக்களோடு தானும் சிறை இருப்பில் துன்புற்று, அவர்களை விடுதலையாக்கி நல்வாழ்வை அருளுகின்ற கடவுளை பற்றி கொள்வோம்.
2. வாழ்வளிக்கும் கடவுளை
வெளிப்படுத்தும் சிலுவை
(மாற்கு 10 : 46 - 52)
இயேசுவும் அவர்தம் சீடர்களும் எரிகோவை விட்டு புறப்படும் பொழுது நடக்கின்ற சம்பவம் நமக்கு திருமறை பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களால் கவனிக்கப்படாத ஒரு மனிதன், குடும்பம் இருந்தும் கைவிடப்பட்ட ஒரு மனிதன், வழி அருகில் உட்கார்ந்து யாசித்துக்கொண்டிருக்கின்றான்.
யாசித்து கொண்டிருக்கும் மனிதனுக்கு பெற்றோர் இருக்கின்றார்கள். அதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது, இருப்பினும் உறவுகளால் கைவிடப்பட்டு தனித்து விடப்பட்ட ஒரு மனிதனை திருமறை நமக்கு காட்டுகிறது.
யாசித்துக் கொண்டிருந்த மனிதர் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி. அவர் இயேசுவை அறிந்திருக்கின்ற விதம் ஆச்சரியத்தை கொடுக்கிறது.
அவர் நசரேனாகிய இயேசு என்று அறிந்து நாசரேத்தில் இருந்து யாதொரு நன்மையும் வராது என்ற மக்களின் தவறான பார்வையை மாற்றுவதற்கு முற்படுகின்றார்.
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று வேண்டுகின்றார். அவரின் குரலை இனம் கண்டு கொண்டு இயேசு கிறிஸ்து அவருக்கு வாழ்வளிக்க முற்படுகின்றார்.
அவரை அழைத்து வாருங்கள் என்று தம் சீடர்களுக்கு பணிக்கின்றார். அவர்கள் அவரை அழைத்து வருகின்றார்கள். அவர் வருகின்ற போதே தன் அடையாளமாக இருக்கின்ற உடைமைகளை தூக்கி எறிந்து விட்டு தனக்கு புது வாழ்வு கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையோடு இயேசுவிடம் வருகின்றார்.
இயேசு அவரிடம் கேட்கின்ற கேள்வி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? அவர் ஒரு வரியில் பதில் கொடுக்கின்றார் நான் பார்வை அடைய வேண்டும்.
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று சொல்லி பார்வை தந்ததோடு மாத்திரமல்ல அவருக்கு மறுவாழ்வை வழங்குகின்றார்.
இயேசுவுக்கு சிலுவைப் பாடுகள் வழங்கப்பட்டதின் நோக்கம் இப்படிப்பட்ட கைவிடப்பட்ட மக்களுக்கும் மாற்றுத்திறன் படைத்தவருக்கும் வாழ்வளித்ததால் வந்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் துன்புற்ற மக்களோடு தானும் துன்புற்றதின் காரணமாக கிடைக்கப்பெற்றது. அந்தப் பாதையை இயேசு கிறிஸ்து விருப்பமுடன் ஏற்றுக் கொண்டார்.
வாழ்வளிக்க வந்த கடவுளின் உருவமாக இயேசு கிறிஸ்து தம் செயல்கள் வழியாக அன்பை அருளினை கைவிடப்பட்ட மற்றும் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு ஈந்தளித்தார்.
சிலுவை பாடுகளை தியானிக்கும் போதெல்லாம் இயேசு கிறிஸ்துவின் வலிகளையும் அவர்தான் செயல்களையும் மறந்துவிட்டு தியானித்தால் அது பொருத்தமாகாது.
இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்ட சிலுவை, புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு வாழ்வளித்ததன் மூலமாக கிடைக்கப்பெற்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் பாதைகள் அவரின் சிலுவை பாடுகள் அனைத்தும் வெளிப்படுத்துகின்றது என்னவென்றால் "கடவுளின் அன்பையும், நம் மக்கள் மீது கொண்டிருக்கின்ற பாசத்தையும், அவர்களுக்கு வழங்கின அருளையும் அது வெளிப்படுத்துகின்றது."
3. கடவுளின் மாற்று
உருவாக்கத்தை வெளிப்படுத்தும் சிலுவை.(1
பேதுரு 2 : 17 - 24)
இயேசுவின் சீடரான பேதுரு எழுதுகின்ற கடிதத்தில் தமது அன்பர்களுக்கு வலியுறுத்தி கூறுகின்ற காரியங்களில் மிகவும் முக்கியமானது ‘மாற்று உருவாக்கம்’.
கடவுளின் மாற்று உருவாக்கத் திட்டத்தில் கடவுளின் செயல்பாடுகள் எவ்வளவு இருந்தது அது சிலுவையின் வழியாக எவ்வாறு வெளிப்பட்டது என்பதை பேதுரு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.
கடவுளின் அன்பும் மனதுருக்கமும் அருளும் எப்படிப்பட்டதாக செயல்பட்டது என்பதை வேறொரு கோணத்தில் அணுகி அதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
இயேசு கிறிஸ்துவின் பாடு மரணங்கள் ஒருபுறம் அவரின் அன்பை வெளிப்படுத்தினாலும், அவரது பாடுகளின் வழியாக மனுக்குலம் பெற்றுக்கொண்ட மாற்றத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பேதுரு வலியுறுத்துகின்றார்.
"சிதறுண்ட ஆடுகளைப் போலிருந்தீர்கள் இப்பொழுதோ உங்கள் ஆத்மாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டு இருக்கிறீர்கள்" என்று கூறுகின்றார்.
சிதறடிக்கப்பட்ட ஆடுகளைப் போல இருந்த மக்களை கடவுள் தமது ஒரே பேரான குமார் ஆகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் வழியாக சிலுவையின் வழியாக உங்களை கூட்டிச் சேர்த்திருக்கின்றார்.
இயேசு கிறிஸ்துவின் தழும்புகளினாலே மனுக் குடும்பம் குணமாக்கப்பட்டிருக்கிறது என்பது பேதுருவின் ஆணித்தரமான நம்பிக்கையாகும்.
நமக்காக இயேசு கிறிஸ்து பாடுகளை ஏற்றுக் கொண்டு நமது பாவங்களுக்காக அவர் சிலுவையை ஏற்றுக்கொண்டு அதன் ஊடாக நமக்கு வாழ்வை வழங்கி இருக்கின்றார்.
இயேசுவின் சிலுவை சாவு அவரின் அடியவர்களை சிதறடிக்கப்பட்டிருந்தாலும் அதே சிலுவை மரணம் சிதறடிக்கப்பட்டவர்களை கூட்டி சேர்த்து இருக்கிறது என்பதே இந்த பகுதியில் மைய அழுத்தமாகும்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் அவர்தம் அடியவர்களுக்கும் அவரை பின்பற்றிய மனு குடும்பத்திற்கும் மாபெரும் மாற்றுருவாக்கத்தை தந்திருக்கிறது.
அந்த மாற்று உருவாக்கம் என்னவென்றால் அச்சத்தினாலும் பயத்தினாலும் சிதரடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் மாபெரும் ஆற்றலை வழங்கியிருக்கிறது. அதோடு மட்டுமல்ல அவர்கள் எழும்பி நிற்கவும் இயேசு கிறிஸ்துவின் லட்சியமான இறை ஆட்சியை காட்டுகின்ற திருப்பணியில் அவர்களை களம் இறக்கி இருக்கிறது என்பதே ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் உயிர்ப்பு, ஆற்றலை இழந்த அவர்தம் அடியவர்களுக்கு ஆற்றலை தந்தது, அவர்களை கூட்டி சேர்த்தது மீண்டும் களத்தில் பணிபுரிவதற்கு வல்லமையை கொடுத்தது.
இந்த மாற்று உருவாக்கமே உலகில் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் விடுதலை வாழ்விற்கு அடித்தளமாக அமையவும் காரணமாக இருந்தது.
நிறைவாக:
விந்தை கிறிஸ்து இயேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை என்ற பாடல் வரிகள் ஆழமான கருத்தை கொண்டு இருக்கின்றன என்பதை நம் நன்கு அறிவோம்.
இந்த விந்தையான அன்புக்கு ஈடாய் என்ன காணிக்கை நான் தருவேன் என்ற பக்தர் எழுப்புகின்ற கேள்வி நம்மை சிந்திக்க வைக்கின்றது. சிலுவையில் வெளிப்பட்ட கடவுளின் அன்பையும், மனதுருக்கத்தையும், ஆற்றலையும், வாழ்வையும், மாற்று உருவாக்கத்தையும் மனதில் கொண்டவர்களாக சிலுவைப் பாடுகளை தியானிப்போம் சிலுவை பாடல்களை பாடுவோம் சிலுவை வழியில் இணைந்து பயணிப்போம்.
மீண்டும் ஒருமுறை சிலுவையைப் பற்றிய நமது பார்வைகளை சற்று விசாலமாக்கி கொள்வோம்,
சிலுவை ...,
🍎வெற்றியின் அடையாளம்,
🍎அச்சத்தை வென்றவர்களின் குறியீடு,
🍎இறை நீதிக்காக பாடுபடுபவர்களின் சிம்மாசனம்,
🍎இறை வழியில் பயணிப்பவர்களுக்கான பாதை,
🍎இறை ஆட்சிக்குரிய பரிசு,
🍎இறை மக்களுக்கான அங்கீகாரம்.
என்பதை கருத்தில் கொண்டு திருச்சபையாக சிலுவையை சுமப்போம். இறையருள் பெருகட்டும் நமது பாடுகளின் வழியாக இறையாட்சி அடையட்டும்.
நட்புடன் உங்கள்
அருள்திரு. அகஸ்டி ஞான காந்தி
சிஎஸ்ஐ திருச்சி -தஞ்சை திருமண்டலம்

Comments
Post a Comment