பெரிய வியாழன்
முன்னுரை
மகா நன்றி கூறல், இறுதி இரா உணவு, திருவிருந்து ஆகிய மூன்று பதங்களும் ஆண்டவர் இயேசுவினால் ஏற்படுத்தப்பட்ட இறுதி இரா உணவை குறிக்கின்றது. சிறப்பாக, இவ் உணவு பெரிய வியாழன் அன்று நினைந்து கொள்ளப்படுகிறது. இதனைப் பற்றி நாம் பார்க்கும்போது இதனை முதல் முதலில் எழுதியவர் பவுல் என்பது உறுதியாகிறது. 1 கொரிந்தியர் 11:21-26 வரை உள்ள பகுதியில் நாம் இதனை காணலாம். அத்துடன் இதன் பின்னர் ஏனைய சமநோக்கு நற்செய்தியாளர்கள் இப்பகுதியை பவுலிடமிருந்து பெற்று எழுதியுள்ளார்கள். குறிப்பாக மத்தேயு 26:26-29 வரையுள்ள பகுதியிலும், மாற்கு 16:22-25 வரையுள்ள பகுதியிலும், லூக்காவிலும் நாம் இதனை பார்க்கலாம். ஆனால் யோவான் எழுதிய நற்செய்தியில் நாம் இதனைக் காண முடியாது. ஏனெனில் யோவான் திருவிருந்து பகுதியை ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு இயேசு போஷித்த சம்பவத்தோடு தொடர்புபடுத்துகிறார். இதனை யோவான் 6:1-10 வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். மேலும் இத்திருவிருந்து பற்றிய இறையியல்கள் திருச்சபைகளுக்கு திருச்சபைப்பிரிவுகளுக்கிடையே இன்று வேறுப்பட்டு திருவிருந்தினால் திருச்சபை பிளவுபடுவதற்கும் வரலாற்றிலே காரணங்கள் இருந்தமையை நாம் மறந்துவிட முடியாது. அத்துடன் பிற சமயங்களில் கூட திருவிருந்து போன்ற பகிர்வின் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அன்பால் ஒன்றுபடும் திருவிருந்து
கடவுள் மனுக்குலம் மீது கொண்ட அன்புக்காக பல்வேறுப்பட்ட பகிர்வுகளை மேற்கொண்டிருக்கிறார். யோவான் 3:16ல், தமது குமாரனையே அவர் இவ்வுலகிற்கு அளித்து இவ்வுலகை தன்னுடன் ஒப்புரவாக்கி உள்ளார் என 2 கொரிந்தியர் 5:16-20 வரையுள்ள பகுதி கூறுகின்றது. மேலும் இவ்வன்பு மக்களிடையே நிலவ வேண்டும் என்பதற்காக மத்தேயு 5:22-24ல் காணிக்கை பகிரும்போது கூட ஒப்புரவாகுதலின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கின்றார். அத்துடன் யோவான் 13:33-34 ஆகிய வாக்கியங்களில், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். அன்பாயிருப்பதன் ஊடாக உலகத்தார் உங்களை என்னுடைய சீடர் என்று கூறுவார்கள்” எனவும் கூறி சீடத்துவத்தின் அடித்தளம் அன்பு என்பதை ஆண்டவர் இயேசு எடுத்துக் காண்பிக்கின்றார். அவர் சிறப்பாக இவ்வுலகின் மீது கொண்ட அன்பினிமித்தமாக தன்னையே பிறருக்காக பகிர்ந்தளிக்கின்ற ஓர் இடமாக இது காணப்படுகிறது. இதற்காகவே நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகின்றோம்.
உயிரைக் கொடுத்து கட்டிய உடன்படிக்கை
கடவுள் மனிதனுடன் பல்வேறுப்பட்ட உடன்படிக்கைகளை செய்துள்ளார். எனவே இதன் அடையாளமாக திருவிருந்து காணப்படுகின்றது. 1 கொரிந்தியர் 11:23-29 வரையுள்ள பகுதியில் பவுல் இப்பகுதிக்கு சிறப்பாக ‘கொய்னோனியா’ என்ற கிரேக்க பதத்தை பயன்படுத்துகின்றார். ‘கொய்னோனியா’ என்பது ஒரு ஐக்கியம், அன்பு ஆகிய பதங்களைக் குறிக்கின்றது. அதாவது ஓர் செல்வந்தன் தன்னிடத்தில் உள்ள ஒரு குறிக்கப்பட்ட பணத்தை ஏழைக்கு வழங்கி அவரைப் பார்த்து, “நீ வியாபாரம் செய்து என்னுடைய நிலைக்கு உயர்ந்து வா” என அழைக்கும் இடமே கொய்னோனியா. அதேபோன்றே ஆண்டவர் இயேசுவும் தனது அன்பை எங்களுடன் பகிர்ந்து தனது நிலைக்கு உயர்ந்து வருமாறு எங்களை அழைக்கும் இடமே இப்பந்தி ஆகும். இப்பந்தியிலே விருந்தை அளிப்பவரைவிட விருந்தை பெறுபவரே மேன்மையானவர்களாக கருதப்படுகின்றனர். அந்த நிலைக்கு எங்களை உயர்த்தும் ஆண்டவர் 28ம், 29ம் வாக்கியங்களில் இயேசுவினுடைய உடல் இவ் உடல் இன்னதென்று சோதித்து அறிந்துகொள்ளுங்கள் எனக் கூறுகின்றார். இங்கு கிறிஸ்துவின் உடல் என்பது திருச்சபையைக் குறிக்கின்றது. எனவே நாம் திருவிருந்தை பெற வருகின்ற போது எங்களுக்கு அருகில் இருக்கும் ஒருவரை எங்கள் நிலைக்கு உயர்த்துவோம் என கடவுளுடன் பொருத்தனை செய்யும் இடமாகவே அல்லது உடன்படிக்கை செய்யும் இடமாகவே இப்பந்தி காணப்படுகின்றது.
நினைவில் மட்டும் அல்ல, வாழ்க்கையில் வாழும் திருவிருந்து
மனித வாழ்வில் பல்வேறுபட்ட நினைவேந்தல்களைப் பற்றி நாங்கள் எண்ணுகின்றோம். அதுபோல பவுல் கூறுகின்றார் இத்திருவிருந்து என்பது ஆண்டவர் இயேசுவின் மரணத்தை, உயிர்ப்பை நாங்கள் நினைந்து கொள்ளும் இடம் என அவர் குறிப்பிடுகின்றார். இங்கு மரணம் என்பது வரலாற்றிலே அரசியலும், சமயமும் இணைந்து இயேசுவுக்குச் செய்த அநீதியையும் மாற்கு 3:6ன் படி சதுசேயரும், ஏரோதியரும் ஒன்றிணைந்து தீட்டிய சதித்திட்டம் பழிவாங்குதல் போன்றவைகளும் நினைந்துகொள்ளப்பட வேண்டிய இடமாக இது காணப்படுகின்றது. எனவே சிறப்பாக இன்றைய காலத்தில் இழைக்கப்படுகின்ற அநீதிகள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள், ஆதிக்கங்கள், சுரண்டல்கள் போன்றவைகளும் இப்பந்தியிலே இன்றும் நினைந்து கொள்ளப்பட வேண்டியவைகளாக இருப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு நாங்கள் நினைந்துகொள்ளும்போது மற்றவர்களைக் குறித்த தாகம் எமக்குள்ளே ஏற்படும். மற்றவர்களை அந்த விடுதலையாக்கும் பணியில் ஈடுபடுகின்ற போது கடவுளினுடைய அன்பை நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறோம். திருவிருந்தில் அப்பத்தை எடுத்து உடைக்கும் போது அதில் ஏற்படுகின்ற இடைவெளி எல்லோரையும் உள்வாங்குகின்ற தன்மையை எமக்கு உணர்த்துகின்றது. சாதி, சமய, வேறுபாடுகள் எதுவுமின்றி எல்லோரும் உள்வாங்கப்படும் இடமே திருவிருந்து ஆகும். எனவே, நாங்கள் இவற்றை நினைந்து கொள்ளுதல் அவசியமாகின்றது.
உடைக்கப்பட்ட அப்பம் – பகிரப்பட்ட வாழ்க்கை
திருவிருந்தைப் பொறுத்தவரையில் நான்கு முக்கியமான நிகழ்வுகள் நினைந்துகொள்ளப்படுகின்றன. இயேசு அப்பத்தை எடுத்தல், நன்றி செலுத்துதல், அதை பிட்டல், பகிர்தல் ஆகிய நான்கு செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றில் பிட்டல் அல்லது உடைத்தல் என்னும் செயற்பாடு மிக அவசியமாகின்றது. இயேசு தம்மை பிறருக்காக பிட்கவும், சிந்தவும் ஆயத்தப்பட்டதை போன்று நாமும் எம்மைப் பிறருக்காக உடைக்கவும் சிந்தவும் ஆயத்தமாக்குதல் அவசியமாகின்றது. சிறப்பாக பேராயர் ஒஸ்கா ரோமேரோ அவர்கள் திருவிருந்து பந்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போதே ஆயுததாரிகளால் சுடப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை பிரிவைச் சார்ந்த மைக்கல் ரொட்றிகோ அவர்கள் திருவிருந்து பந்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்களுடைய உதாரணங்கள் எவ்வாறாக இவர்கள் மக்களுக்காக தங்களை பகிர்ந்துகொண்டார்கள், கடவுளுடைய அன்பை பகிர்ந்துகொண்டார்கள் என்பதையும் எங்களுக்கு நினைவுபடுத்துகின்றது. குறிப்பாக பொருhளதார, சமூக, கலை, கலாசார, சமய பின்னணிகளில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்டு எங்களை நாங்கள் உடைக்கும் அனுபவம் ஓர் அன்பின் அனுபவமாகும். இதனையே திருவிருந்து எம்மிடம் எதிர்பார்க்கின்றது.
முடிவுரை
ஆண்டவர் இயேசு இவ்வுலகிலே தன்னைத்தான் வெறுமையாக்கிய நிகழ்வை நாம் நினைந்துகொள்கின்றோம். அவர் தன்னைத்தான் வெறுமையாக்கி பூவுலகிற்கு வந்ததாக பிலிப்பியர் 2:5-11ல் நாம் காணலாம். இவ் வெறுமையாக்கல் நிகழ்வு ஒரு அன்பின் நிகழ்வாகும். இந்நிகழ்வையே இன்றைய பெரிய வியாழன் அன்று யோவான் 13:1-10ல் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவியதன் ஊடாக அவ்வெறுமையாக்கல் அனுபவத்துக்கூடாக அவர் பிரயாணிக்கின்றார். இவ் அன்பின் நிகழ்வு அனைத்துத் தடைகளையும் தாண்டி அடிமை செய்யும் பணியை தானே தெரிந்தெடுத்து செயற்பட்டமை ஓர் போட்டியற்ற, விளம்பரமற்ற திருப்பணிக்கு ஓர் முன்னடையாளமாகக் காணப்படுகின்றது. எனவே நாமும் இவ் அன்பின் விருந்தாகிய பாதங்களை கழுவுகின்ற சடங்கின் ஊடாக உண்மையான சீடர்களாக இயேசுவைப் பின்பற்றுவது அவசியம். இச்சீடத்துவம் திருமறைக்குள்ளோ திருச்சபை அருட்கொடைகளுக்குள்ளோ மட்டுப்படுத்தப்படவில்லை. அது அன்பை பகிர்வதன் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதனை இயேசு எவ்வாறு பகிர்ந்துகொண்டாரே அதைபோல நாமும் பகிர்ந்துகொள்ள முற்படுவோமாக. ஆமேன்.
ஆக்கம்
அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்
பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்
Comments
Post a Comment