Let the King of Peace Enter (3 mins Read)

 29 மார்ச் 2026

கிறிஸ்துவின் பவனி, பாடுகள், மரணம் - குருத்தோலை ஞாயிறு

முன்னுரை

மனித வாழ்வில் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக பல்வேறுபட்ட பவனிகள் இந்நாட்களில் இடம்பெறுவதை நாம் அவதானிக்கலாம். சிறப்பாக குருத்தோலை ஞாயிறுடன் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பரிசுத்த வாரத்திற்குள் நாங்கள் பிரவேசிக்க இருக்கின்றோம். இவ்வாரம் கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான ஒரு வாரமாக காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். எனவே இயேசுவுடன் இணைந்து எருசலேமை நோக்கிய பவனியில் நாமும் எம் சிந்தனைகள், வார்த்தைகள், செயல்கள், அடையாளங்கள் போன்றவற்றை அவருடன் இணைந்துகொள்வது அவசியமாக காணப்படுகின்றது. இப்பயணம் சிலுவையை மையப்படுத்திய நோக்கம் கொண்டதாக காணப்படுதல் அவசியம். “ஒருவர் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றி வரக்கடவர்” என்ற வார்த்தைக்கமைய எங்களுடைய பிரயாணங்களை பவனிகளை நாம் மீள்மதிப்பீடு செய்து இயேசுவுடன் எம்மை இணைத்துக் கொள்ளும் காலம் இது. குறிப்பாக மத்தேயு 17:1-13 வரையுள்ள இயேசு உருமாற்றம் பெற்ற நிகழ்வோடு இப்பவனி தொடர்புபட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம். அங்கே இயேசு துன்பப்படுவதற்காக எலியா, மற்றும் மோசே போன்றவர்கள் அவரை உற்சாகப்படுத்தியது போல நாமும் இப்பவனியில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகின்றது. 

இயேசுவின் பவனி ஓர் வரலாற்று பவனி

ஆண்டவர் இயேசு எருசலேமை நோக்கி மேற்கொண்ட பயணம் ஓர் வரலாற்றுப் பயணமாகும். அதாவது கி.பி.168ம் ஆண்டளவில் யூதர்கள் கிரேக்கர்களுக்கு அடிமைகளாகக் காணப்பட்டனர். இக்காலப்பகுதியில் கிரேக்க அரசனாகிய 4ம் அந்தியோஸ் எப்பிபானஸ் என்பவர் யூத எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, கிரேக்க கலாசாரத்தை பிரதேசங்களில் ஈடுபடுத்தி இருந்தார். இதனால் ஆத்திரமுற்ற யூதத் தலைவனாகிய தெயுஸ் எப்பிபானஸ் என்பவர் கிரேக்க ஆட்சியிலிருந்து எருசலேம் ஆலயத்தை விடுவிக்கும் வகையிலே யுத்தத்தில் ஈடுப்பட்டு வெற்றியும் பெற்றார். இதனால் கி.பி.168ல் ஆலயம் தூய்மைப்படுத்தப்பட்டது. தூய்மைப்படுத்தப்பட்டு பிரதிஷ்டை வழிபாடும் இடம்பெற்றது. இப்பிரதிஷ்டை வழிபாட்டில் தெயுஸ் எப்பிபானஸ் கழுதைக் குட்டியின் மேல் ஏறி ஆலயத்தை நோக்கி பவனியாக வருகின்ற போது மக்கள் குருத்தோலைகளை அசைத்து அவனுக்கு மகிழ்ச்சி தெரிவித்தது ஓர் வரலாற்று நிகழ்ச்சியே ஆகும். இந்நிகழ்ச்சியே இங்கும் தொடருகின்றது. 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து எருசலேமை நோக்கி அவர் பவனியாக கழுதை குட்டியின் மீது ஏறி பிரயாணப்படுகின்ற நிகழ்வு இறைவாக்கினர் சக்கரியாவினாலே உரைக்கப்பட்டுள்ளது (சகரியா 9:9). இதன் நிறைவையே மாற்கு 11:7ம் வசனமும் குறிப்பிட்டு நிற்பதை நாம் காண்கின்றோம். மேலும் இப்பவனியிலே மக்கள், “ஓசன்னா, ஓசன்னா” என்று கூக்குரலிடுகின்றார்கள். அதாவது, ஓசன்னா என்பதற்கு ‘இன்றே இரட்சியும்’ என்று பொருள்படுகின்றது (மாற்கு 11:9). எனவே இப்பவனி ஓர் விடுதலையின் பவனியாகும். சமூக, பொருளாதார, அரசியல், சமய அழுத்தங்களுக்கு உட்பட்ட மக்கள் இயேசுவிடம் இருந்து விடுதலையை வேண்டி நிற்பதற்கான ஒரு பயணமே இங்கு இடம்பெறுகின்றது. இயேசுவையும் அவர்கள் தெயுஸ் எப்பிபானஸ் போன்று அவர்கள் எதிர்ப்பார்க்கும் ஓர் அரசியல் மேசியா போக்கு இவ்விடுதலைப்பயணத்தில் இணைக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். 

இயேசுவின் பயணம் எல்லோரையும் உள்வாங்கும் ஓர் பயணம்

ஆண்டவர் இயேசுவின் இப்பயணம் எல்லோரையும் உள்வாங்கும் பயணமாக இருப்பதை நாம் காண்கின்றோம். இப்பயணத்திலே மக்கள் இயேசுவை ‘தாவீதின் மகன்’ என அழைப்பதாக மத்தேயு 21:9ம் வசனம் எங்களுக்குக் காண்பிக்கின்றது.  அதாவது ‘தாவீதின் மகன்’ என்று இயேசுவைக் குறிப்பிடுகின்றார்கள். இங்கே ‘தாவீதின் மகன்’ என்று இயேசுவைக் குறிப்பிடுவதற்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.  2 சாமுவேல் 5:1-8ல் தாவீது எபூசியரோடு யுத்தம் புரிய சென்றிருந்த வேளையில் அங்குள்ள மக்கள் தாவீதை நோக்கி, “இதோ எங்கள் தேசத்தில் இருக்கின்ற குறைபாடுள்ள மக்கள் உன்னை ஒரு கை பார்க்குமளவிற்கு நீ பலம் குறைந்தவன்” எனக் கூறுகின்றார்கள். எனவே இதனால் தாவீது மனக்குழப்பம் அடைகின்றான். எனினும் அவன் யுத்தத்திலே வெற்றி பெறுகின்றான். வெற்றி பெற்ற தாவீது தனது தேசத்திற்கு சென்று அதாவது அக்காலத்தில் காணப்பட்ட நடக்கமுடியாத, பேசமுடியாத, பார்க்கமுடியாத மக்களை ஆலயத்திலிருந்து புறம்பாக்குகின்றார். இவ்வாறு ஆலயத்திலிருந்து புறம்பாக்கப்பட்ட மக்கள், “தாவீதினால் நாங்கள் இவ்வாறு புறம்பாக்கப்பட்டோம். தாவீதின் பரம்பரையிலிருந்து ஒருவர் வருவார். அவர் எங்களுக்கு ஆலயத்திற்குள் செல்லும் அனுமதியை மறுபடியும் தருவார்” என்று அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். எனவேதான், பார்வை இழந்த பர்த்திமேயு என்பவரும் கூட இயேசுவை “தாவீதின் குமாரனே” என்று அழைக்கின்றார் (மத்தேயு 10:47). எனவே இதற்கூடாக ஆண்டவர் இயேசு இழந்துபோன உரிமையை, அங்கீகாரங்களை சமூகத்திலே மனிதருக்கு மறுபடியும் கொடுப்பதற்காக எருசலேம் ஆலயத்தை நோக்கி நகரத்தை நோக்கி மேற்கொள்கின்ற ஓர் பயணத்தையே நாம் இங்கு காண்கின்றோம். 

புரட்சிகரமான ஓர் பயணம்

ஆண்டவர் இயேசுவின் பயணம் ஓர் புரட்சிகரமான பயணமே ஆகும். இயேசுவின் பயணத்தின் போது அங்கே குழுமியிருந்த மக்கள் இயேசுவைப் பார்த்து, “ஓசன்னா” என்று அவர்கள் பெரும் குரலை எழுப்பியது மாத்திரமல்ல அங்கு அவர்கள் அவரை ஓர் அரசனாக வரவேற்பதை நாங்கள் பார்க்கின்றோம். இதனை லூக்கா நற்செய்தி 20:28-38 வரையுள்ள பகுதி எமக்குக் காண்பிக்கின்றது. இங்கே ஓர் அரசனாக அவர்கள் வரவேற்றது மாத்திரமல்ல அரசருக்குரிய புகழாரம் சூடுவதையும் நாங்கள் பார்க்கின்றோம். இந்தச் சூழ்நிலையிலேயே அங்கிருந்த சமயத்தலைவர்கள் மக்களை அதட்டுகிறார்கள். அதாவது, இந்த ‘ஓசன்னா’ என்கிற பாடலை பாடக்கூடாது என்று சொல்லுகிறார்கள். ஏனென்றால் அது மெசியா வருகின்ற போது மாத்திரமே பாடப்பட முடியும் என்று யூதர்கள் நம்பியிருந்தார்கள். அது இயேசுவுக்கு பாடுவது பொருத்தமற்றது என எண்ணினார்கள். எனினும் ஆண்டவர் இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பாடாதபட்சத்திலே இந்தக் கல்லுகள் கூடப் பாடும்” என்று கூறுவதைப் பார்க்கின்றோம். எனவேதான் அங்கு மேசியாவின் பாடல் பாடப்படுவதும் அங்கு இயேசு புரட்சிகரத்தலைவனாக மக்களால் அடையாளங் காணப்படுவதும் இந்த பவனியில் இன்னுமொரு அடையாளமாக இருக்கின்றது. இவ்வாறு அதட்டுகின்ற மக்களுக்கு தக்க பதிலை இயேசு கொடுப்பதை நற்செய்திகளிலே நாம் பார்க்கின்றோம். மாற்கு 10:13ம் வசனத்திலே, சிறுவர்களை ஆசீர்வதிக்க இயேசுவிடம் கொண்டு வந்த வேளையிலே சீடர்கள் அவர்களை அதட்டினார்கள். எனினும் இயேசு அவர்களுடைய குரல்களுக்கு செவிகொடுக்கின்றார். இவ்வாறு அடையாளமிழந்த சிறுவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்கள் போன்றவர்களின் பக்கத்தைத் தெரிவு செய்கின்ற ஓர் புரட்சிகரமான பயணம் இதுவென்பதை நாங்கள் இங்கே பார்க்க முடியும். 

துயரப்படுகின்ற மக்களுடன் அடையாளப்படுத்தும் பயணம்

இயேசுவின் பயணம் துயரப்படுகின்ற மக்களோடு தன்னை அடையாளப்படுத்துகின்ற ஓர் பயணமாகவே இது காணப்படுகின்றது. அவரும் அத்தகைய துயரங்களை அனுபவிப்பதற்காக எருசலேமை நோக்கி அவர் செல்லுகின்றார். எருசலேமுக்கு வெளியே எந்த இறைவாக்கினர்களும் கொல்லப்படுவதில்லை என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். எனவேதான் மத்தேயு 21:10,11ம் வாக்கியங்களிலே அங்கே இயேசுவைக் குறித்து நாசரேத்தூர் இயேசு, கலிலேயாவைச் சேர்ந்தவர், இறைவாக்கினர்கள் ஆகிய வரலாற்றுப் பதங்கள் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கின்றோம். அதாவது, ஆண்டவர் இயேசு தன்னை கலிலேயா மக்களோடு அவர் அடையாளப்படுத்தினார். நாசரேத்தூர் என்பதும் ஓர் புறக்கணிக்கப்பட்ட ஓர் பகுதி. எனவே இங்கே இயேசுவினுடைய நிலையிலே சிறப்பாக அவர் ஒரு இறைவாக்கினராகவும் அடையாளப்படுகிறார். இவ்வாறாக ஆண்டவர் இயேசு ஒரு வரலாற்று நபராக இங்கே மக்களால் அடையாளங் காணப்படுகின்றார். இன்றைய உலகிலே சில சந்தர்ப்பங்களிலே விசுவாசக் கிறிஸ்துவுக்கும் வரலாற்று இயேசுவுக்கும் இடையே மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெறுகின்றது. இயேசுவின் வரலாற்றுப் பகுதிகளை நாம் மறந்துவிட்டு தெய்வீக பக்கங்களை மாத்திரம் நாங்கள் இன்று தேடுவதைப் பார்க்கின்றோம். அப்படிப்பட்ட சமூகத்திற்கு வரலாற்று இயேசு மறுபடியும் ஒரு கலிலேயனாக நாசரேத்தூரைச் சேர்ந்தவராக அவர் தன்னை அடையாளப்படுத்துகின்ற ஓர் பயணமாக இது காணப்படுகின்றது. எனவே இயேசுவின் வரலாற்றுப் பக்கங்களை நாங்கள் கண்டுகொள்ள நாங்கள் ஆயத்தப்படுவதும் மிக அவசியமாகின்றது.  

முடிவுரை

குருத்தோலை பவனி இயேசுவின் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு பவனியாகும். அவர் எருசலேமை நோக்கி பாடுகளை அனுபவிக்க புறப்பட்டு செல்லுகின்ற அதேவேளை ஒரு சமாதானத்தின் பிரதிநிதியாக அவர் செல்லுவதை நாம் காண்கின்றோம். அத்துடன், தன்னை ஒரு வரலாற்று நபராக அடையாளப்படுத்தி ஒரு கலிலேயனாக நாசரேத்தூரானாக அவர் புறப்பட்டுச் செல்வதை நாங்கள் இப்பவனியிலே காண்கின்றோம். மேலும் அதட்டுகின்ற சமயத்தலைவர்களை அதட்டி மேசியாவின் பாடலை பாட வைத்த ஓர் புரட்சிகரமான தலைவரையும் நாம் இங்கு காண்கின்றோம். மேலும் அவருடைய இப்பவனி ஓர் விடுதலைக்கான பவனி. விடுதலை வேண்டி நிற்கும் மக்கள் அவரை ஓர் விடுதலையாளனாக பார்க்கின்ற ஓர் பவனி. எனவே பல்வேறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல், சமய ஒடுக்குமுறைகளிலிருந்து எம்மை தொடர்ந்தும் விடுதலையாக்குமாறு நாமும் மற்றவர்களை விடுதலையாக்கும் பணியில் ஈடுபடவும் எல்லாம் வல்ல கடவுள் தமது அருளை அளிப்பாராக. ஆமேன். 

ஆக்கம் 

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்


Comments