"விசுவாசம், புரட்சி, விடுதலை வழங்கும் தோமாவின் அறிக்கை ! ” (3 Mins Read)

நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்


மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலே ஏற்படுகின்ற உறவுநிலை சம்பந்தமாக பற்றுறுதி அல்லது விசுவாச அறிக்கைகள் உருவாகின்றது. குறிப்பாக இவ் அறிக்கைகள் ஈடுபடுதல், அனுபவித்தல், வெளிப்படுத்தல் ஆகியவைகள் ஊடாக உருவாக்கப்படுகின்றன. 

இணைச்சட்டம் 26:5ல், இஸ்ராயேல் மக்கள் தங்களுடைய பற்றுறுதி அறிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் லூக்கா 9:18-21ல் பேதுரு இயேசுவை நோக்கி, “நீர் உயிருள்ள கடவுளுடைய குமாரனாகிய மெசியா” என அறிக்கையிட்டார். யோவான் 20:24-29ல் தோமா இயேசுவை நோக்கி, “என் ஆண்டவரே, என் கடவுளே” என அறிக்கையிடுகின்றார். 

இவ்வாறு உருவாக்கப்பட்ட பற்றுறுதி அறிக்கைகள் பின்னர் திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கை, அத்தேனேசியுஸ் பற்றுறுதி அறிக்கை, மற்றும் நிசேயா பற்றுறுதி அறிக்கை என எம்மத்தியில் வலம் வருகின்றது. நிசேயா பற்றுறுதி அறிக்கை கி.பி.325ல் உருவாக்கப்பட்டு கடந்த வருடம் 1700வது வருடத்தை நாம் நினைந்துகொண்டோம். 

வரலாற்றை மாற்றிய விசுவாச அறிக்கை

வரலாற்றில் வாழ்ந்த கடவுளுடைய மனிதர்கள் காலத்திற்கு காலம் தமது கைவிடப்பட்ட அனுபவங்களின் பின்னணியில் கடவுளை நோக்கி, “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” என அறிக்கையிடுகின்றனர். 

திருப்பாடல் அல்லது சங்கீதம் 22:1ல், தாவீது கடவுளை நோக்கி, “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமல் நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?” என வினா எழுப்புகின்றார். மாற்கு 15:34-35ல் ஆண்டவர் இயேசுவும் தந்தையை நோக்கி, “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்” என சிலுவையில் வினா எழுப்புவதை நாம் பார்க்கின்றோம். 

இவ்வாறாக இயேசுவின் சீடனாகிய தோமாவும் தன்னுடைய பற்றுறுதி குறைவுப் பின்னணியில் ஆண்டவர் இயேசுவின் மீதுள்ள ஈடுபாடு பங்குபற்றுதல் அதனூடாக இயேசுவைக் கண்டபோது மகிழ்ச்சிமேலிட்டால் “என் ஆண்டவரே, என் கடவுளே” என அறிக்கையிடுவதை நாம் காண்கின்றோம். 

இயேசுவின் சீடனாகிய தோமா, யோவான் நற்செய்தியில் மாத்திரம் வெளிப்படுகின்றார். குறிப்பாக இயேசு லாசரு இறந்துபோனார் என்ற செய்தியை தெரிவித்து தாம் அவ்விடத்தில் செல்லப்போகிறேன் எனக் கூறியபோது, “நாமும் சென்று அவருடன் இறப்போம்” எனக் கூறுகின்றார் (யோவான் 11:26). 

மேலும் இயேசு தன்னுடைய இறுதி பிரியாவிடை பேச்சில் “நான் போகிற இடம் இன்னதென்று நீங்கள் அறிவீர்கள்” எனக் கூறியபோது “நீர் போகிற இடத்தை அறியோமே வழியை எப்படி அறிவோம்?” என வினா எழுப்புகின்றார். யோவான் 14:1-6. இதன் மூலம் தோமா எப்பொழுதும் அனுபவித்தலின் ஊடாகவே அறிக்கையிடுவதை நாம் காணலாம். 

இயேசுவின் இறைத்தன்மையை வெளிப்படுத்தும் அறிக்கை

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் இறைத்தன்மையை வெளிப்படுத்தும் பல நிகழ்வுகள் காணப்படுகின்றன. குறிப்பாக இயேசு பாவங்களை மன்னித்தல் (மாற்கு 2:1-12), புதுமைகளைப் புரிதல் (மாற்கு 3:1-6), இயேசுவின் கன்னிப்பிறப்பு (லூக்கா 1:26-38), இயேசுவின் உயிர்ப்பு (மாற்கு 16:1-10) ஆகியவைகளோடு கூட பிறர் இயேசுவை அறிக்கையிடும் நிகழ்வுகளும் தெய்வீகத் தன்மையை உணர்த்தி நிற்கின்றன. 

இங்கு தோமாவின் அறிக்கை “என் ஆண்டவரே, என் கடவுளே” என்பது இயேசுவின் இறைத்தன்மையை எடுத்துக்காட்டும் இன்னுமோர் அறிக்;கையாகும். யூதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாவேயை தெய்வமாகக் கொண்டு அவரையே ஆண்டவர் என பணிந்து கொண்ட பின்னணியில் இயேசுவினுடைய இறைத்தன்மையை தோமா இங்கு கூறிநிற்பது மிகப் பெரியதோர் சமயப்புரட்சி ஆகும். 

ஆதித்திருச்சபை இயேசுவின் தெய்வீகத்தன்மையைக் கண்டதன் ஓர் வெளிப்பாடே இந்த தனிப்பட்ட அல்லது சமூக அறிக்கையாகும். இதுவே இன்று அனைத்துலக திருச்சபையின் அறிக்கையாக அவரின் தெய்வீகத்திற்கு அல்லது இறைத்தன்மைக்கு சான்று பகர்கின்றது.

அரசியல் மற்றும் அதிகாரத்திற்கு எதிரான புரட்சி

இயேசு வாழ்ந்த காலப்பகுதிகளில் யூதர்கள் உரோமர்களுக்கு அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் உரோம அரசனாகிய சீசாரையே ‘ஆண்டவன்’ என அறிக்கையிட்டனர். இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது பார்வோன் மன்னனையே ஆண்டவர் என அறிக்கையிட்டனர். 

இப்படிப்பட்ட பின்னணிக்கு எதிராக தோமா இயேசுவை “ஆண்டவர், ஆள்பவர்” என அறிக்கையிடுகின்றார். இவ்வறிக்கை உரோம அரசியலுக்கு எதிரான ஓர் மாற்றுக் கலாசார அறிக்கையாகும். இதனையே உரோம அரசர்களுக்கு எதிராக ஆதிக் கிறிஸ்தவ திருச்சபை பலமாகவும், உறுதியாகவும் அறிக்கையிட்டதன் விளைவாக இரத்தசாட்சி மரணங்களுக்கு உட்பட்டனர். 

எனவேதான் இவ் அறிக்கை உரோம அரசியலுக்கு எதிரான ஓர் அறிக்கையாகும். இங்கே “இயேசுவே ஆண்டவர்” என பலமாக திருச்சபை அறிக்கையிட்டதன் விளைவாகவே ‘கிறிஸ்தவர்களின் இரத்தம் திருச்சபையின் வித்து’ என திருச்சபை பிதாவாகிய தெர்த்தூரியன் சான்று பகர்கின்றார். 

கலாசார அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

தோமா இயேசுவை, “ஆண்டவரே, என் தேவனே” என அறிக்கையிடுதல் அக்காலத்தில் நிலவிய சமய கலாசாரங்களுக்கு எதிரான ஓர் அறிக்கையாகும். அதாவது பொதுவாக ‘ஆண்டவன்’ என்னும் பதம் ஆண்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பதமாகும். சாராள் தன் கணவனாகிய ஆபிரகாமை, ‘ஆண்டவன்’ என அழைப்பதை நாம் காணலாம். இது ஆணாதிக்க தன்மையை எடுத்துக் காண்பிக்கின்றது. 

எனவே இயேசுவை ‘ஆண்டவர்’ என அழைத்தல் ஆணாதிக்க சக்திகளுக்கு எதிரான ஓர் அறிக்கையாகும். இது அடிமைப்படுத்தும் கலாசாரம் அல்ல. மக்களுக்கு விடுதலை வழங்குகின்ற ஒரு ஆண்டவராக இயேசு காண்பிக்கின்றார். “ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்கள் ஒருவர் மற்றவர்களின் கால்களைக் கழுவுங்கள்” என்ற அடிமையின் கலாசாரத்தைப் பின்பற்றிய இயேசுவை தோமா ‘ஆண்டவர்’ என இங்கு அடையாளம் பண்ணுகிறார். 

எனவே இது ஓர் வெறுமையாக்கியவர்களின் அனுபவமாகும். அதிகார கலாசாரங்களுக்கு எதிரான அறிக்கையாகும். 

நிறைவாக,

இயேசுவை ஆண்டவரும் இறைவனுமாக அல்லது கடவுளுமாக தோமா மேற்கொண்ட அறிக்கை ஓர் தனிப்பட்ட அறிக்கையாக காணப்பட்ட போதிலும் அது ஓர் சமூக அறிக்கையாக இன்று மாற்றமடைந்து இருந்தது. தோமா இந்த அறிக்கையோடு மாத்திரம் தனது வாழ்வை நிறைவு செய்யாமல் தான் அனுபவித்ததை கீழைத்தேய பகுதிகளுக்கு வருகை தந்து அதை மக்களோடு பகிர்ந்து கொண்டார். 

சிறப்பாக இந்தியாவிலுள்ள சென்னை, மைலாபூர், இலங்கை போன்ற பகுதிகளுக்கும் வருகை தந்து தன்னுடைய அறிக்கையை பிறருடன் பகிர்ந்து கொண்டு இயேசுவை ஆண்டவராகவும் கடவுளாகவும் மக்களுக்குக் காண்பித்தார். அதுபோல உயிர்ப்பின் பிரசன்னத்தை உணர்ந்துகொள்ளும் நாங்களும் இயேசுவை ஆண்டவராகவும் கடவுளாகவும் அனுபவிப்பதும், அறிக்கையிடுவதும், பிறருக்கு அறிவிப்பதும் எமது தலையாகிய கடமையாகும். இதனையே ஆண்டவர் இயேசு மத்தேயு 28:19,20ல் எங்களை வேண்டி நிற்கின்றார். ஆமேன்.  

ஆக்கம்

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்                                    


Comments