கல்லறை முடிவல்ல — அது புதிய வாழ்வின் ஆரம்பம்.

புனித சனி – நம்பிக்கை

முன்னுரை 

யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ மனித வாழ்வில் நம்பிக்கை அவசியமாகின்றது. ஒவ்வொரு சமயங்களிலும் இறுதியியல் பற்றி நம்பிக்கை மக்களுக்கு வாழ்வளிக்கும் ஒன்றாகவும் மக்களை வழிநடத்தும் எண்ணக்கருவாகவும் காணப்படுகின்றது. இதன் வகையில் புனித சனிக்கிழமை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு முன்னாக வழங்கும் நம்பிக்கையை இந்நாள் உருவாக்குகின்றது. யூதர்களை பொறுத்தவரையில் ஒருநாள் மாலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கின்றது. எனவே சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கே இந்நம்பிக்கை உதயமாகின்றது. எனவே இந்நாள் முக்கியமான ஒரு நாளாக கருதப்படுகின்றது.

போதனைகளுக்கு நம்பிக்கை ஊட்டப்படும் நாள்

ஆண்டவர் இயேசு பல்வேறுபட்ட போதனைகளை ஆற்றியதை நாம் அவதானிக்கலாம். இப்போதனைகள் உயிர்பெற்று எழுந்தமையை இந்நாளில் நாம் நினைந்துகொள்கின்றோம். சிறப்பாக இயேசுவினுடைய மரணம் ஒருநாள் நடைபெற்ற ஒரு நிகழ்வு அல்;ல. பல நிகழ்வுகளின் ஒரு தொகுப்பாகும். மேலும் இவை சமயத்தினாலும் அரசியலினாலும் திட்டமிடப்பட்டதாகும் (மாற்கு 3:6). நிராகரிப்பு, அவமானங்கள் எல்லாமே மரணத்திற்கு முன்னான நிகழ்வுகள் ஆகும் (யோவான் 1:10). ஆண்டவர் இயேசு தனது மரணத்தை தானே முன்னறிவித்துள்ளார் (மாற்கு 8:30,31, மாற்கு 9:30,31, மாற்கு 10:45). மேலும் மரணத்தினூடாகவே வாழ்வு உண்டாகும் என இயேசு யோவான் 12:20-26ல் போதித்து இருக்கின்றார். இப்போதனைகள் அனைத்தும் உயிர்பெறுகின்ற திருநாளாக இதனை நாம் காணலாம். 

மத்தேயு 12:40ன் படி யோனா மூன்று நாள் நினிவே தேசத்தில் இறைவாக்குரைத்தவராகிய இவர் மூன்று நாள் மீனின் வயிற்றிற்குள் இருந்தது போல மானிடமகனும் பூமியின் நிலத்துக்குள் மூன்று நாள் இருக்க வேண்டுமென இயேசு கூறியிருந்தார். இவ்வாறான போதனைகள் உயிர்பெற்று எழுந்த ஒரு நாளை இங்கு நினைந்துகொள்ளுகின்றோம். சிறப்பாக மத்தேயு 27:62ல் இவ்வாக்கியம் எம்மை சிந்திக்க வைக்கின்றது. எனவே போதனைகளுக்கு உயிர்கொடுத்தது வெறுமையான கல்லறை ஆகும். அங்கு சென்ற பெண்மணிகள், தேவதூதர்கள் போன்றவர்களினுடைய வாக்குகளும் உயிர்பெற்று எழுந்தன. 

கல்லறை கட்டி வைக்க முடியவில்லை

மாற்கு 27:62,63ல், அங்கு பிலாத்துவினிடத்திலே சென்ற யூதர்கள் கல்லறையை காவல் காக்குமாறு வேண்டினார்கள். ஏனெனில் இயேசுவின் சீடர்கள் அக்கல்லறையில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் இயேசுவை எடுத்துச் செல்ல முடியும் என்ற அச்சம் காணப்பட்டது. எனவேதான் யோவான் 20:13ல் கல்லறைக்குச் சென்ற மகதலேனாவும் இந்த அச்சத்தை வெளிப்படுத்துகின்றார். “அவரை எங்கே வைத்தீர்கள்? கல்லறையில் காணவில்லை” என்பதை எடுத்துக் கூறுகின்றார். ஆனால் அங்கு நீதிக்காக சமூக விடுதலைக்காக வாழ்ந்து உழைத்த இயேசுவை கல்லறை கட்டி வைக்க விரும்பவில்லை. அது வெளியே அவரைத் தள்ளியது. இதனைப் போன்று சமூக விடுதலைக்காக உழைத்த ஒவ்வொருவரும் விதைக்கப்பட்டவர்களே ஒழிய புதைக்கப்பட்டவர்கள் அல்ல. இன்றும் சமூக விடுதலைக்காக ஒவ்வொருவரையும் செயற்பட வைப்பதும் இந்தச் சிந்தனையே. இது சமயம், மொழி, இனம், வயது, பால் அனைத்தையும் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது இச்சிந்தனையே ஆகும் என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

நம்பிக்கையுடன் வாழுமாறு விடப்படும் அழைப்பு

இயேசு உயிரோடு எழுந்தார் என்ற சிந்தனை ஓர் பலம் மிக்க ஓர் சிந்தனை ஆகும். இது வெறுமையான கல்லறை, சீடர்களுக்குக் கொடுத்த காட்சி போன்றவற்றால் நிரூபிக்கப்படுகின்றது. குறிப்பாக லூக்கா 24:1-44 வரையுள்ள பகுதியில் இயேசுவின் சீடர்கள் வீதி வழியே உரையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து அவர்கள் மத்தியிலே சந்தேகங்கள் எழுந்தது. ஆனால் இயேசு அவர்கள் மத்தியில் தோன்றி அவர்களினுடைய அகக்கண்களைத் திறந்து உயிர்ப்பை நம்புமாறு அவர்களை  அழைக்கின்றார். இத்தகைய குழப்பத்திற்கூடாக தோமாவும் சென்றிருந்தார். யோவான் 20:19-31 வரையுள்ள பகுதியில் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார். இயேசு அவருக்குத் தோன்றி, “தோமாவே நீ ஐயப்படாதே” என அழைக்கின்றார். அப்பொழுது தோமா தனது நம்பிக்கையை பலப்படுத்துகின்றார். மேலும் 1 கொரிந்தியர் 15:17ல், “இயேசுவின் உயிர்ப்பு இல்லையேல் எமது பிரசங்கமும் பேச்சும் வீண்” என பவுல் கூறுகிறார். இவ்வாறான திருமறைப் பகுதிகள் அனைத்தும் நம்பிக்கையை புதுப்பிக்குமாறு எம்மை அழைக்கின்றது. 

நிறைவாக

சமயங்கள் கூறும் இறுதியியல் பற்றிய நம்பிக்கைகளும் இன்று உயிர்த்;துடிப்புடன் காணப்படுகின்றன. இயேசுவின் உயிர்ப்பு எவ்வளவிற்கு முக்கியமோ அதேபோன்று இயேசுவின் வருகையைக் குறித்தும் திருச்சபையாகிய மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துகின்றாள். இதுபோன்ற நம்பிக்கைகள் இந்து சமயத்திலும் கல்கியின் அவதாரம், பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தாவின் அவதாரம் இன்னும் நடக்கும் எனவும் உலகம் நம்புகின்றது. எனவே இன்றைய வன்முறை மிக்க சமுதாயத்தில் இவ் நம்பிக்கைகள் எம்மத்தியில் அன்பையும் பற்றுறுதியையும் விதைக்க அழைக்கின்றது. எனவே புனித ஆகஸ்தினார் கூறுவது போன்று ‘எங்கு அவநம்பிக்கை இருக்கின்றதோ அங்கே நம்பிக்கையை விதைத்து எங்கே அமைதியின்றி இருக்கின்றனர்களோ அங்கே அமைதியை எடுத்துச் செல்லும் கருவிகளாக நாம் கடந்து செல்ல அழைக்கப்படுகின்றோம்.’ கல்லறைப் போன்ற கடினமுள்ள மனங்கள் உடைக்கப்பட்டு அமைதிக்காகவும் நீதிக்காகவும் செயற்படும் உள்ளங்களாக மாற இந்நாட்களில் நாம் முற்படுவோமாக. ஆமென். 

ஆக்கம்


அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர், இலங்கை

Comments