உயிர்த்தெழுந்த ஆண்டவர் - எம்முடன் இணைந்து பிரயாணிப்பவர்

 

26 ஏப்ரல் 2026


உயிர்த்தெழுந்த ஆண்டவர் - எம்முடன் இணைந்து பிரயாணிப்பவர்

முன்னுரை



மானிட வாழ்வில் பலர் எம்முடன் இணைந்து பிரயாணிக்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய பிரயாணங்கள் தொடர்ந்தேற்சியாக இடம்பெறுவதில்லை. ஆனால் திருமறை கூறும் கடவுள் எம்முடன் இணைந்து பிரயாணிப்பவர். இஸ்ராயேல் மக்களோடு 400 வருடங்களுக்கு மேல் அவர் ஒன்றிணைந்து பிரயாணித்தவர். இதனையே உயிர்த்தெழுந்த ஆண்டவர் லூக்கா 24:13-33 வரையுள்ள பகுதியில் எம்மாவூருக்கு சென்ற சீடர்களுடன் இணைந்து பிராயாணித்தவராகக் காணப்படுகின்றார்.

சமாதானத்திற்கான பிரயாணம்

ஆண்டவர் இயேசு எம்மாவூருக்கு பிரயாணப்படுவதை நாம் காண்கின்றோம். எம்மாவூரிலேதான் உரோம இராணுவ தலைமைப்பீடம் காணப்பட்டது. அங்குதான் ஆண்டவர் இயேசுவை கொல்லுவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. இப்பேர்ப்பட்ட ஓர் சூழ்நிலையிலேயே இயேசு நிராயுதபாணியாக காயப்பட்ட கரங்களுடன் கைகளை விரித்துக் கொண்டு எம்மாவூருக்குச் சென்று அவர்களுக்கு சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கின்றார். ஏசாயா 9:6ல், ‘இயேசுவுக்கு சமாதானப் பிரபு’ எனும் பெயர் கொடுக்கப்பட்டது. எனவே லூக்கா 2:12-14ல் உலகில் நல்மனதோருக்கு அமைதியைக் கொடுக்கவும், லூக்கா 10:1-12ல் சீடர்களை நோக்கி, “நீங்கள் நற்செய்தி என்னும் சமாதானத்தை பிறருக்கு அறிவியுங்கள்” எனவும் கட்டளையிட்டார். மலைப்பொழிவில் மத்தேயு 5:9ல், “சமாதானத்தை ஏற்படுத்தும் சிற்பிகளாக மாறுங்கள்” என இயேசு கட்டளையிடுகிறார். இப்பணி உயிர்ப்பின் பின்னரும் நீடிப்பதை நாம் காண்கிறோம். யோவான் 20:19-31 வரையுள்ள பகுதியில் தோமாவுக்கு காட்சி கொடுக்கும் இயேசு தோமா உள்ள போதும் இல்லாத போதும் சீடர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” எனக் கூறுகிறார். பிளவுப்பட்டிருக்கும் உலகில் இவ் அமைதி இன்றும் உயிர்ப்பின் இயேசுவினால் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. 

போதனைகள் உயிர்பெற்ற பயணம்

உயிர்ப்பின் இயேசு எம்மாவூருக்கு சென்ற சீடர்களுடன் இணைந்து பிரயாணப்படுகிறார். அப்பொழுது ஆண்டவர் இயேசுவினுடைய மரணம், பாடுகள், போன்றவற்றைக் குறித்து அச்சீடர்களுக்கு போதித்து, நினைப்பூட்டி போதனைகளை உயிர்ப்பெற்றெழ இயேசு செய்கிறார். குறிப்பாக பழைய ஏற்பாடுகளிலும், திருப்பாடல்களிலும், ஆகமங்களிலும் கூறப்பட்டவைகளை இயேசு நினைப்பூட்டுகிறார். திருப்பாடல் 22ல் அவருடைய வேதனைக் குரல்களும், ஏசாயா 53ல் பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்ற பகுதிகளை நினைப்பூட்டுகிறார். மேலும் மாற்கு 8:30,31, 9:30,31 ஆகிய பகுதிகளில் ஆண்டவர் இயேசு தன்னுடைய மரணத்தைக் குறித்து தானே போதித்த போதனையை நினைப்பூட்டுகின்றார். யோவான் 12:20-26ல், “கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது வாழமுடியாது” எனக் கூறி தமது மரணத்தை விளங்கப்படுத்துகின்றார். இவ்வாறாக எம்மாவூருக்குச் சென்ற பயணம் போதனைகளுக்கு உயிர்பெற்று கொடுத்த பயணம். 

தம்மை சீடர்களோடு அடையாளப்படுத்திய பயணம்

எம்மாவூருக்குச் சென்ற சீடர்கள் இயேசுவை யார் என அடையாளம் காணவில்லை. அவர் அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டு, சீடர்களோடு பகிர்ந்து கொண்டபொழுது அவரை இயேசு என அடையாளம் கண்டனர். எனவே இயேசு தன்னை சீடர்களுக்கு அடையாளப்படுத்திய திருவிருந்தின் உச்ச நிலையை நாம் இங்கு காண்கின்றோம். ஆண்டவர் இயேசு சீடர்களோடு அருந்துகின்ற விருந்தோம்பல்களில் இதுவும் ஒரு நிகழ்வாகும். எனவே இயேசுவை சீடர்கள் இங்கு அடையாளம் காணுகின்றனர். வெறுமையான கல்லறை, சீடர்களுக்கு கொடுத்த காட்சி, மகதலேனா மரியா கண்ட காட்சி, அதோடுகூட எம்மாவூருக்கு சென்ற சீடர்கள் கண்ட காட்சியும் இங்கு முக்கியமானதாகும்.  

முடிவுரை

இயேசுவின் பிரயாணம் ஓர் சமாதானத்தின் பிரயாணமாகவும் போதனைகளுக்கு உயிர்கொடுத்த பிரயாணமாகவும் தம்மைப் பிறருடன் அடையாளப்படுத்திய ஓர் பிரயாணமாகவும் காணப்படுகின்றது. உயிர்ப்பின் இயேசு இப்பணியை நாங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென்று எதிர்ப்பார்க்கின்றார். தனிமனிதனுக்குள், இருவருக்கிடையில், சமூகங்களுக்கிடையில், தேசங்களுக்கிடையில் அமைதியை ஏற்படுத்தும் சிற்பிகளாக நாம் மாறவேண்டும். இயேசுவின் இறையரசின் போதனைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் இக்காலப்பகுதிகளில் இறையரசின் விழுமியங்களுக்கு உயிர்க்கொடுத்து இறையரசின் மாதிரிகளாகவும் அடையாளங்களாகவும் மாற எங்களை ஆண்டவர் அழைக்கின்றார். மேலும் திருவிருந்தின் ஊடாக வெளிப்படும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் ஒவ்வொருவரும் வாழுகின்ற இடங்களில் கிறிஸ்துக்களாக, கிறிஸ்துவின் அடையாளத்தைக் காண்பிக்கும் பிரஜைகளாக மாற அழைக்கப்படுகிறோம். இவற்றை செய்வதற்கு வேண்டிய அருளை ஆசியை கடவுள் அருள்வாராக. 

ஆக்கம் அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்                                    


Comments