உயிர்த்தெழுதல்: மரணத்தின் மீது வெற்றி – நம்பிக்கையின் புதிய விடியல்

உயிர்த்தெழுதல் - மரணத்தின் மீது வெற்றி


முன்னுரை

திருமறை உயிர்த்தெழுதல் பற்றி பல்வேறு வகையான தகவல்களை எங்களுக்குத் தெரிவிக்கின்றது. இயேசுவுக்கு முன்னரும் இவ் உயிர்த்தெழுதல் காணப்பட்டிருக்கின்றது. 2 அரசர் 8:4-37ம் வசனம் வரையுள்ள பகுதியில் சூனேமியாள் என்னும் பெண்மணியின் குழந்தை இறந்த போது  எலிசா இறைவாக்கினர் உயிரோடு எழுப்புகின்றார். இயேசுவின் திருப்பணிகளிலும் பல்வேறுபட்டவர்கள் உயிர்பெற்று எழுந்திருக்கின்றனர். குறிப்பாக நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்கா 7:11-17), லாசரஸ் (யோவான் 11), அத்துடன் இயேசு தன்னைத் தானே உயிரோடு எழுந்தார் (திருத்தூதுவபணிகள் 2:23-38 வரையுள்ள பகுதி). அத்துடன் இயேசுவுக்குப் பின்னரும் அவரைப் பின்பற்றியவர்கள் உயிரோடே எழுப்பி இருக்கின்றார்கள். குறிப்பாக திருத்தூதுவர்பணிகள் 20:7-13ல் யுத்திகு என்பவர் மேல் மாடியிலிருந்து விழுந்து உயிர் பிரிந்த வேளையில் பவுல் அவரை உயிரோடு எழுப்பியுள்ளார். இவ்வாறாக இவ் உயிர்த்தெழுதல் பல நிலைகளில் ஏற்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் இன்று ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலையே நாம் இங்கு நினைந்து கொள்கின்றோம். 

சமூக நம்பிக்கையை வழங்கும் உயிர்த்தெழுதல்

உயிர்பெற்று எழுதல் அல்லது உயிர்த்தெழுதல் என்பது ஒரு வாழ்வை அருளுகின்ற செயற்பாடு. இது மரணத்திலிருந்து வெற்றிக்கு எம்மை அழைத்துச் செல்லுகின்றது. அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கையை நோக்கி எம்மைப் பயணிக்குமாறு உந்தித் தள்ளுகின்றது. யோவான் 20:1-16ல் ஊரரறிந்த பெண்ணாகிய மரியாள் இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ணப்பட்ட சரீரத்திற்கு வாசனைத் திரவியங்களை பூச வந்திருந்த வேளையில் அவர் உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைக் காண்கின்றாள். இவரிடமிருந்து அநேகம் பிசாசுகளை இயேசு துரத்தியதாக லூக்கா 8:1-3 வரையுள்ள பகுதியில் நாம் படிக்கலாம். இப்பேர்ப்பட்ட பெண்ணுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு ஓர் வாழ்வை விடுதலையை அருளியிருந்தார். இப்போது இவளுடைய நம்பிக்கைகள் எல்லாம் அழிந்து போன சூழலில் கல்லறைக்கு வருகின்றாள். எனவே தனிப்பட்ட வாழ்வில் நம்பிக்கையை இழந்திருக்கின்ற இப்பெண்மணிக்கு இயேசு உயிரோடே எழுந்து நம்பிக்கை அருளுவதை நாம் இங்கு காணலாம். வெறுமனே இப்பெண்ணினுடைய வாழ்வில் இயேசு மாத்திரம் உயிரோடு எழுந்து நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. அவருடைய போதனைகளும் உயிர்பெற்று எழுந்து அங்கே அவளுக்கு நம்பிக்கையை அளித்தது. 

சமூக நம்பிக்கையை வழங்கும் செயற்பாடு

எசேக்கியேல் 37ம் அதிகாரத்தில், உலர்ந்த எலும்புகளைப் பற்றிய சம்பவம் பொதிக்கப்பட்டுள்ளது. எசேக்கியேல் இறைவாக்கினர் சிறையிருப்பின் மத்தியில் அருட்தொண்டு ஆற்றினார். குறிப்பாக, கி.மு.586-539ம் ஆண்டு வரையான காலத்தை நாம் குறிப்பிடலாம். இக்காலப்பகுதியிலேயே பாபிலோனியாவில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ராயேல் மக்கள் தமது சொந்த தேசத்திற்கு தாங்கள் ஒருபோதும் போகமாட்டோம் என எண்ணியிருந்தார்கள். இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலேயே தான் அங்கே எசேக்கியேலுக்கு கடவுள் உலர்ந்த எலும்புகளைக் காண்பித்து அவைகளுக்கு உயிர்கொடுக்க நான் வல்லவராக இருப்பேனே என்றால் இஸ்ராயேல் மக்கள் மறுபடியும் தங்கள் சொந்த நாட்டிற்கு போகின்ற சூழலை நான் ஏற்படுத்துவேன் என உடைந்து போன சமூகத்திற்கு நம்பிக்கையை அருளுவதை நாம் பார்க்கின்றோம். எனவே உயிர்ப்பு வெறுமனே தனிமனித வாழ்விற்கு மட்டுமன்றி அது சமூக வாழ்விற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் செய்தியாக நாம் இங்கு காணலாம்.

எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை தரும் உயிர்த்தெழுதல்

எல்லா சமயங்களும் எதிர்காலத்தைக் குறித்து பேசுகின்றன. கிறிஸ்தவ சமயத்திலும் எதிர்காலம் குறித்த பல நம்பிக்கைகள் பேசப்படுகின்றன. 2 கொரிந்தியர் 5:1-10 வரையுள்ள பகுதியில் புனித பவுல் நமது வாழ்வு கூடார வாழ்விற்கு ஒப்பிடப்படுகின்றது. ஓர் நிரந்தரமற்ற வாழ்வாகவே இந்த சரீர வாழ்வை அவர் காண்கின்றார். பிலிப்பியர் 1:21-25 வரையுள்ள பகுதியில் பவுல் மரணத்தைப் பற்றி எழுதும்போது மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையிலே நான் போராடுகிறேன். சிறப்பாக உயிரோடு இருந்து அருட்பணியை ஆற்றுவது எனக்கு விருப்பமாக இருக்கின்றது. நான் மரித்தும் கடவுளோடு வாழ்வதும் எனக்கு விருப்பமாக இருக்கின்றது. இந்த இரண்டிற்கும் இடையே நான் போராடுகிறேன் என அவர் எழுதுகிறார். இங்கு மனித வாழ்வின் நோக்கம் எல்லாம் கடவுளை மகிமைப்படுத்துவதே ஆகும். வாழ்வின் மூலமும் மரணத்தின் மூலமும் கடவுள் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இறைவனின் திருவுள சித்தமாகும். இவ்வாறாக கிறிஸ்துவுக்குள் இறப்பவர்கள் அவரோடே உயிர்பெற்று எழுவார்கள் என 1 தெசலோனிக்கேயர் 4:16லே ஓர் எதிர்கால நம்பிக்கையைக் குறித்து ஆண்டவர் பேசுகின்றார். எனவே எதிர்காலத்தில் நாம் அவரோடு வாழுகின்ற வாழ்வு எமக்கு நிகழ்கால நம்பிக்கையையும் எதிர்காலத்தைக் குறித்த ஒரு நம்பிக்கையையும் எமக்குத் தருகின்றது. எனவே இயேசுவின் உயிர்ப்பு நிகழ் காலத்தில் எதிர்காலத்தை காண எமக்கு உதவுகின்றது. 

நிறைவாக

ஆண்டவர் இயேசு பாவத்திற்குள் வாழ்ந்த பலரை பணி மூலம் உயிர்த்தெழச் செய்திருக்கின்றார் (லூக்கா 19:1-10, யோவான் 8:1-10). மேலும் அவரது உயிர்ப்பு தனிமனித வாழ்வில் நம்பிக்கையையும் சமூக வாழ்வில் நம்பிக்கையையும் எதிர்கால வாழ்வைக் குறித்த நம்பிக்கையையும் எமக்கு அருளுகின்றது. உயிர்ப்பினால் நாம் பலமடைகின்றோம் (மாற்கு 16:1-10). இப்பலம் தொடர்ந்தும் கட்டப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்காகவே இப்பலம் அருளப்பட்டுள்ளது. எனவே எமது நாளாந்த வாழ்வில் நாம் நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டி இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகரும் உன்னத திருப்பணியை வார்த்தையாலும் செயலாலும் ஆற்ற கடவுளின் பெலத்தை வேண்டி நிற்போமாக. ஆமேன்.



ஆக்கம் 

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

அருட்பணியாளர்

இலங்கை திருச்சபை                                   


Comments