Hoy Spirit - Promise of the Indwelling Presence

வாக்களிக்கப்பட்ட தூய ஆவி


திருமறையில் பலவிதமான வாக்களிப்புக்களை நாம் காணலாம். இவைகளில் தூய ஆவி பற்றிய வாக்களிப்புக்கள் காணப்படுகின்றன. யோவேல் 2:28ல், ‘மானிடர் அனைவர் மீதும் ஆவி பொழியப்படும்’ எனக் கூறப்படுகின்றது. இது பழைய ஏற்பாட்டில் ஆள்த்தன்மையுள்ள ஓர் பதமாகக் காணப்பட மாட்டாது.

புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு யோவான் லூக்கா 3:16ம் வாக்கியத்தில், “நான் உங்களுக்கு நீரினால் திருமுழுக்கு அளிக்கின்றேன். என் பின்னால் ஒருவர் வருகிறார். அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியினால் திருமுழுக்கு கொடுப்பார்” என்னும் வார்த்தை கூறப்பட்டுள்ளது. இவ்வாறான வாக்குமொழிகள் நிறைவேறப்பட இருக்கின்றன என்பதையே இயேசு இங்கு குறிப்பிடுகின்றார். 

உடனிருக்கும் தூய ஆவி

திருமறையில் தந்தையாம் கடவுள் எம்முடன் உடனிருப்பதாக பல்வேறு திருமறை பகுதிகள் காண்பிக்கின்றன. ஏசாயா 41:10ல் இஸ்ரவேலர்களுடன் உடனிருப்பதாகவும், யோசுவா 1:9ல் யோசுவாவோடு உடனிருப்பதாகவும், திருப்பாடல் அல்லது சங்கீதம் 23:4,5ல் தாவீதோடு உடனிருப்பதாகவும், லூக்கா 1:26-38ல் மரியாவுடன் உடனிருப்பதாகவும் தந்தையாம் கடவுள் கூறிநிற்கின்றார். அதேபோன்றே குமாரனாகிய கடவுளும் உடனிருப்பதாக தெரிவிக்கின்றார். 

மத்தேயு 28:19,20 ஆகிய வசனங்களில் “உலகின் இறுதிநாள் வரை நான் உங்களுடனே இருப்பேன்” எனக் கூறப்படுகின்றது. அதேபோன்றே யோவான் 14:15,16ம் வாக்கியங்களில் தூய ஆவியாகிய கடவுளும் எப்பொழுதும் எங்களுடன் உடன் இருக்கிறார். அவரை ‘சகாயர்’ அல்லது ‘தேற்றரவாளர்’ என்னும் பதத்தினால் புரிய வைக்கப்படுகின்றது. எனவே அவர் எம்முடன் உடன் இருப்பவர் என்கின்ற உயர்திணை பதத்தில் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவரை ஆள்த்தன்மை உள்ளவராக அணுக வேண்டும். இவ்வாக்கியங்களை இயேசு தனது இறுதி பிரியாவிடை வைபவத்திலேயே குறிப்பிடுகின்றார். 

உண்மையின் ஆவியானவர்

சிறப்பாக ‘உண்மை’ என்னும் பதம் திருமறையில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பதமாகும். இவ் உண்மை தொலைந்து போன நிலையிலே நாம் வாழுகின்றோம். ஓசியா 4:1ல், இறைவாக்கினர் ஓசியா “இஸ்ராயேல் சமூகத்தில் உண்மை இல்லை” எனக் குறிப்பிடுகிறார். இறந்து போன இவ்வுண்மையை மறுபடியும் உலகிற்கு கொண்டு வருவதே தூய ஆவியரின் பணி என யோவான் 14:17ம் வசனத்தில் நாம் படிக்கின்றோம். 

எனவேதான் தூய ஆவியருக்கு கொடுக்கப்படும் இன்னுமொரு பதம் ‘உண்மையின் ஆவி’ அல்லது ‘சத்தியத்தின் ஆவி’ எனப் பொருள்படுகின்றது. 

இதனாலேயே திருத்தூதுவர் அல்லது அப்போஸ்தலர் 5:1-10ல் அனனியா சப்பிராள் தமது ஆஸ்திகளை விற்று ஒரு பகுதியை ஒளித்து வைத்து விட்டு ஏனைய பகுதியை திருத்தூதுவர் பாதத்தில் வைத்த வேளையில், “இவ்வளவுக்கா நீங்கள் விற்றீர்கள்?” எனக் கேட்டு “பரிசுத்தாவிக்கு விரோதமாக நீங்கள் ஏன் பொய் சொன்னீர்கள்?” என பேதுரு எச்சரிப்பதை நாம் பார்க்கின்றோம். பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம் என்னவெனில் அது உண்மைக்கு விரோதமான பாவம் எனக் கூறப்படுகின்றது. 

யோவான் 14:18ல், “நான் திக்கற்றவர்களாக உங்களை விடேன்” என்று கூறப்படுகின்றது. அதாவது தூய ஆவியர் எங்களை தனிமையில் விடப்போவது இல்லை அவர் எங்களுடன் இருந்து உண்மைக்கு சான்று பகர எங்களுக்கு உதவி செய்வார் எனவே இந்த உண்மைக்கு சான்று பகர்தல் என்பது ‘இயேசுவுக்கு சான்று பகர்தல்’ என அழைக்கப்படுகின்றது. யோவான் 14:6ல் “நானே வழியும் உண்மையும் வாழ்வும்” எனக் கூறுகின்றார். 

எனவே உண்மைக்கு சான்று பகர்ந்து உண்மையை வாழ வைத்தல் இயேசுவை வாழ வைப்பதற்கு அடையாளமாகின்றது. எனவேதான் திருத்தூதுவர்பணிகள் 2:23ல் பேதுரு எழுந்து நின்று முதலாவது உரையில் உண்மைக்கு சான்று பகர்வதை நாம் காண்கின்றோம். “யூதர்களே நீங்கள் திருச்சட்டம் அறியாத உரோமர்கள் கையில்  இயேசுவைக் கொடுத்து கொலை செய்தீர்கள். அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகள்” என்பது தூய ஆவியரை வாழ வைக்கும் ஒரு செயற்பாடு என்பதை மறந்துவிட முடியாது. 

முடிவுரை

வாக்களிக்கப்பட்டவர் எப்பொழுதும் எங்களோடு உடனிருப்பவர். அவர் உண்மையை வாழ வைக்க எங்களை கருவியாக உபகரணமாக பயன்படுத்த விரும்புகின்றார். மேலும் அவர் எங்களை தனித்து விடுவதில்லை. எமது பணியில் எங்களோடு இருந்து எங்களை உற்சாகப்படுத்துகின்றவர். எனவே அவ்வாக்களிப்பட்டவர் இறைவாக்கினர்கள் ஊடாக, இயேசுவின் மூலமாக அவர் எம்மிடையே இருக்கிறார். வாக்குகள் நிறைவேறிக்கொண்டே இருக்கின்றன. வாக்குகளை நிறைவேற்றுவதும் அதனை வாழவைப்பதும் எமது பணியாகும். 

ஆக்கம்

அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன் 

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்


Comments