Jesus - The ultimate influencer

வாலிபர் ஞாயிறு

இயேசுவை பிரதிபலிக்கும் வாழ்க்கை

மனித வாழ்வில் அநேகர் பலவழிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றார்கள். மாணவர்களைப் பொறுத்தவரையில் ஆசிரியர்களின் தாக்கம் அதிகமாகின்றது. இளைஞர்களைப் பொறுத்தவரையில் இந்நாட்களில் படநடிகர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றார்கள். அதேபோன்று அரசியல்வாதிகளின் தாக்கங்களும் எம்மிடையே காணப்படுகின்றன. 

ஆனால் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் இயேசுவின் தாக்கத்தால் கவரப்பட்டு அவரை வெளிப்படுத்துபவர்களாக வாழ இன்றைய திருமறைப்பகுதிகள் எம்மை அழைக்கின்றன. குறிப்பாக யோவான் 8:12-20 வரையான பகுதிகள் இத்தாக்கங்கள் பற்றி பேசுகின்றன.

"ஒளியாய் வாழ்வோம்"

நமது வாழ்வில் ஒளியை பல்வேறு வழிகளில் நாம் பெற்றுக்கொள்கின்றோம். குறிப்பாக சூரியனிடமிருந்து வருகின்ற ஒளி பல தாக்கங்களை எம்மிடையே ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ஒளிதொகுப்பு, வெப்பம் போன்ற பல வகையில் இது தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. அதனைப் போன்று இயேசுவும் எமது மத்தியில் ஒளியாய் இருக்கின்றார். 

யோவான் 8:12ம் வசனத்தில் இயேசுவின் ‘நானே’ என்ற கூற்று இதனை நிரூபிக்கின்றது. “நானே உலகின் ஒளி” எனக் கூறும் இயேசு சிறப்பாக தன் அந்த ஒளியின் தாக்கங்களை மக்கள் மற்றவர்களிடத்திலே தமது வாழ்க்கையின் மூலம் காண்பிக்க அழைக்கப்படுகின்றனர். மத்தேயு 5:13-15ம் வசனம் வரையுள்ள பகுதியில் “நீங்களே உலகின் ஒளியாகவும் உப்பாகவும் உள்ளீர்கள்” எனக் கூறுகின்றார். 

எனவே நாம் ஒளியைப் போன்று எவ்வாறு அது பரவிச் செல்கின்றதோ தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ அதுபோல இயேசுவை பின்பற்றும் நாங்களும் ஒளியுள்ளவர்களாக ஒளியின் பிள்ளைகளாக உலகில் தாக்கத்தை ஏற்படுத்த அழைக்கப்படுகின்றோம். ஒளி ஐக்கியத்தின் அடையாளம் 1 யோவான் 1:7ல், “நாம் ஒளியில் நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியமாக இருப்போம்” எனக் கூறப்படுகின்றது. மேலும் ஒளி எம்மை வழிநடத்துவதாக திருப்பாடல்; 119:105ல் நாம் காண்கின்றோம். 

"சாட்சியாய் நிற்போம்"

இயேசுவை பின்பற்றுவோர் அவரால் கவரப்பட்டோர் சான்று பகர அழைக்கப்படுகின்றனர். அதாவது இயேசுவின் வாழ்வைக் குறித்தும் போதனையைக் குறித்தும் அவரது மரணம், உயிர்ப்பு போன்றவைகளைக் குறித்தும் சாட்சி கொடுப்பதே இன்றைய வாலிபர்களினதும் ஏனையவர்களினதும் பொறுப்பும் கடமையுமாகும். திருத்தூதர்பணிகள் 1:8லே, ‘தூய ஆவியர் எம்மிடையே வரும்போது நாம் சான்று பகரவும் சாட்சியாக வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம்’ என்பது காண்பிக்கப்படுகின்றது. 

இந்த சான்று வார்த்தை மூலமும் வாழ்க்கை மூலமும் எடுத்துக் கூறப்பட வேண்டும். குறிப்பாக புனித பிரான்சிஸ் அவர்கள் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையடியவர் இதைப் பற்றி சொல்லும்போது “நற்செய்திக்கு சான்றுபகர்ந்து கொண்டே வாழுங்கள். தேவை ஏற்பட்டால் மாத்திரம் வார்த்தையைப் பயன்படுத்துங்கள்” எனக் கூறும் வாக்கு சான்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்கின்றது.

"ஒன்றிப்பில் வெளிப்படும் அன்பு"

கடவுளால் தாக்கத்துக்கு உள்ளாகி கடவுளோடு இணைந்து வாழ்ந்த இயேசு கடவுளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக அவருக்கு சான்று பகர்ந்ததை நாம் அறிவோம். பிலிப்பியர் 2:5-11ல் ‘இயேசு கடவுளோடு இருந்தவர்’ எனக் கூறப்படுகின்றது. இதனையே யோவான் நற்செய்தியாளன் 1:1-3 வசனங்களிலே தெரிவிக்கின்றார். 

கடவுளால், அவரால், அவருடைய செல்வாக்கினால் கவரப்பட்ட இயேசுவுக்கு கடவுள் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் (மாற்கு 2:1-12). மேலும் ஆண்டவர் இயேசுவும் தனது போதனைகளில் கடவுளைப் பற்றி பேசுகின்றார் (மாற்கு 12:28-32). ‘கடவுள் ஒருவரே’ எனக் கூறும் ‘அவர் கடவுள் பட்சபாதம் உள்ளவர் அல்ல’ என்பதை மத்தேயு 5:45,46லே கூறுகின்றார். மேலும் புதுமைகளைச் செய்யும் போது கடவுளிடமிருந்து வல்லமையை பெற்று செய்ததை நாம் பார்க்கின்றோம். 

யோவான் 6:1-20 வரையுள்ள பகுதியில் அப்பங்களை ஐயாயிரம் மேற்பட்ட மக்களுக்கு பலுகச் செய்த போது அதனை எடுத்து ஆசீர்வதித்து வழங்கியதை நாம் காண்கின்றோம். மேலும் கெத்சமனே தோட்டத்திலும் கடவுளில் தங்கியிருந்ததை மத்தேயு 26:39ல் படிக்கின்றோம். அத்துடன் தனது சிலுவை மரணத்திலும் கூட பிதாவை மறக்கவில்லை. 

இதனை மாற்கு 15:34,35ல், “என் ஆண்டவரே என் இறைவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” எனக் கூறுகின்றார். நிறைவில் தன் உயிரை தந்தையிடமே கையளிப்பது தந்தைக்கும் இயேசுவுக்குமிடையே உள்ள உறவையும் தொடர்பையும் ஒருவருக்கொருவர் இருக்கின்ற அந்த கவர்ச்சித் தன்மையையும் எடுத்துக் காண்பிக்கின்றது.

முடிவுரை

எனவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் குறிப்பாக இறையரசின் பிரதிநிதிகளாகிய நாங்கள் இயேசுவின் போதனைகளாலும் மற்றும் இறையரசின் குணவியல்புகளாலும் கவரப்பட்டு வாழ்வதே அவருக்கு சான்று பகரும் செயற்பாடாகும். அவ்வாறு வாழும்போது எம்மில் உள்ள ஒளி மற்றவர்களோடு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. 

அது மாத்திரமில்லாமல் அவ்வாறு ஒளிப் பகிர்வு நடைபெறுகின்ற போது எமக்கும் தந்தைக்கும் உள்ள உறவை மற்றவர்கள் கண்டுகொள்ளவும் அதனால் அவர்கள் எங்கள் மூலம் நற்செய்திக்கு சான்று பகரவும் உதவியாக அமையும். இவைகளைச் செய்வதற்கு கடவுளுடைய அருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்வோமாக. ஆமேன். 

ஆக்கம் 

அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்.

Comments