பெந்தேகோஸ்தே திருநாள் - பேரிரைச்சல்களின் மத்தியில் கடவுளின் வார்த்தைக்கு செவிகொடுத்தல்
முன்னுரை
‘பெந்தேகோஸ்தே’ என்பது ஐம்பதாம் நாள் விழா என பொருள்படும். இது பழைய ஏற்பாட்டில் ‘அறுவடையின் விழா’ எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் கூடாரம் அடித்து இருந்ததையும், தாம் பத்துக் கட்டளைகளை இறைவனிடம் மோசே மூலம் பெற்றுக் கொண்டதையும் நினைந்து கொள்ளும் திருநாளாகும்.
பொதுவாக யூதர்கள் கூடாரத் திருவிழா, அறுவடையின் விழா, பஸ்கா விழா ஆகிய விழாக்களுக்கு எருசலேமுக்கு வருவார்கள்.
அப்படியான ஒரு விழாவிலேயே தூய ஆவி திருச்சபை மீது இறங்கியதை திருத்தூதுவர்பணிகள் 2:1-13 வரையுள்ள பகுதியில் நாம் காணலாம்.
பொதுவாக ஆபிரகாமை அழைக்கும் நிகழ்வோடே திரு அவை உருவாக்கப்பட்டு விட்டதென வாதம் புரிவோரும் உண்டு (தொடக்கநூல் 12:1-3). மேலும் கடவுள் சீனாய் மலையில் இஸ்ராயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் நாளன்றே திருச்சபை உருவாகியுள்ளது என்று கூறுபவர்கள் உள்ளனர். ஒரு சிலர் பெந்தேகோஸ்தே பெருவிழாவன்றே திருச்சபை உருவாக்கப்பட்டது என கூறுபவர்களும் இருக்கின்றார்கள்.
பேரிரைச்சல்களின் மத்தியில் தனிநபர்கள் கடவுளின் வார்த்தைக்கு செவிகொடுத்தல்
பெந்தேகோஸ்தே விழாவை பொறுத்தவரையில் தூய ஆவியர் திருச்சபையின்மீது பொழியப்பட்ட நிகழ்வை மூன்று முக்கியமான நிகழ்வுகளினூடாக ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார்.
சிறப்பாக
- யோவான் 20:19-23 வரையுள்ள பகுதியில் சீடர்கள் மீது தூய ஆவியானவர் பொழியப்பட்டுள்ளார்.
- மேலும் புற இனத்தவர் மீது தூய ஆவியரின் வருகையை திருத்தூதுவர்பணிகள் 10:34-43 வரையுள்ள பகுதி சுட்டிக் காண்பிக்கின்றது.
- அத்துடன் யூதர்கள் மீது தூய ஆவி பொழியப்பட்டதை திருத்தூதுவர்பணிகள் 2:1-13 வரையுள்ள வசனங்கள் எமக்குக் காண்பிக்கின்றன.
கடவுள் தன்னுடைய ஆவியை பகிர்ந்துகொள்கின்ற நிகழ்வு பல பகுதிகளில் காணப்படுகின்றது. கடவுள் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசுவுடன் பகிர்ந்துகொள்கின்றார் (ஏசாயா 43:25).
இயேசு கடவுளின் ஆவியை சீடர்களோடு பகிர்ந்துகொள்கின்றார் (லூக்கா 10:1-12). இப்படியான ஆவிப்பகிர்வொன்றே இங்கு இடம்பெறுகின்றது. ஆசிரியர் கூறுவது போன்று பேரிரைச்சல்களின் மத்தியில் இப்பொழிவு இடம்பெறுகின்றது.
எனினும் கடவுளுடைய வார்த்தைக்கு தனிமனிதர்களாக செவிகொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை திருமறையில் காணலாம்.
1 அரசர் 19:11-18 வரையுள்ள பகுதியில் பேரிரைச்சல்களின் மத்தியில் கடவுளின் வார்த்தைக்கு எலியா செவிகொடுப்பதை நாம் காண்கின்றோம். திருத்தூதுவர்கள் 10:9-15 வரையுள்ள பகுதியில் யோப்பா பட்டணத்தில் காட்சியைக் கண்டாலும் அங்கும் பேதுரு கடவுளின் வார்த்தைக்கு செவிகொடுக்கின்றார்.
பேரிரைச்சல்களின் மத்தியிலும் நாங்கள் அமர்ந்திருந்து இறைவார்த்தைக்கு செவிகொடுத்தல் அவசியம் என திருப்பாடல் 46:10ல் நாம் காண்கின்றோம்.
கடவுளின் வார்த்தைக்கு செவிகொடுத்த திருச்சபை
திருத்தூதுவர்பணிகள் 2:1-13ல் சீடர்கள் சமூகமாக இருக்கும்போதே பேரிரைச்சல்களின் மத்தியிலும் இறைவார்த்தைக்கு செவிகொடுத்ததை நாம் பார்க்கின்றோம்.
மாற்கு 9:2-9 வரையுள்ள பகுதியில் மறுரூப மலையில் ஏற்பட்ட உருமாற்றத்தின் போது இயேசுவின் சீடர்கள் இறைவார்த்தைக்கு செவி கொடுத்தார்கள். “இவர் என்னுடைய பிரிய மைந்தன். இவருக்கு செவிகொடுங்கள்” என்னும் வார்த்தைக்கு செவிகொடுத்தார்கள்.
மேலும் இயேசுவின் திருமுழுக்கின்போது “இவர் என் பிரிய மைந்தன்” என்ற வார்த்தையை சமூகத்தினர் கேட்டதாக லூக்கா 3:21-23 வரையுள்ள பகுதியில் நாம் காண்கின்றோம்.
எனவே கடவுள் தன்னை சமூகத்திலும் வெளிப்படுத்துகின்ற கடவுள். சமூகத்தில் ஏற்படுகின்ற இரைச்சல்கள் மத்தியிலும் சமூகமாக இறைவார்த்தைக்கு கீழ்ப்படிதல், செவிமடுத்தல் அவசியமாகின்றது. ஏனெனில் தூய ஆவியானவர் சமூகத்திற்கும் தன்னை வெளிப்படுத்துபவராகக் காணப்படுகின்றார்.
தூய ஆவியால் ஆற்றலுறும் சாட்சிச் சமூகம்
தூய ஆவியானவர் வருகை தனிமனிதர்களை ஆற்றலுற செய்தது. பேதுரு போன்ற தனிநபர்கள் துணிந்து எழுந்து நின்று உண்மைக்கு சான்று பகிர்ந்தனர் (திருத்தூதர்பணிகள் 2:23-38).
சமூகமாக வார்த்தைக்குச் செவிகொடுத்தவர்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என பேதுருவிடம் கேள்வி கேட்கின்றனர்.
அதற்கு, “மனந்திரும்பி திருமுழுக்கு பெறுங்கள்” எனக் கூறிய போது மூவாயிரம் பேர் அன்றைய தினம் திருமுழுக்குப் பெற்றனர். வார்த்தையால் ஆற்றல் உற்ற மக்கள் வார்த்தைக்கு வாழ்வளிக்கும் சமூகமாக மாறியதை திருத்தூதுவர்பணிகள் 2:42-47 வரையுள்ள பகுதி எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.
தூய ஆவியரின் வார்த்தைக்கு தனிநபர்களாக சமூகமாக செயற்பட்டவர்கள் வார்த்தைக்கு வாழ்வு கொடுத்ததை நாம் காணலாம். இதனையே பெந்தேகோஸ்தே பெருவிழா எமக்கு ஞாபகப்படுத்துகின்றது.
முடிவுரை
இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் தமது சீடர்களுடன் தன்னை அடையாளப்படுத்தினார். நாற்பதாம் நாள் அவர் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
பின்னர் விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பத்தாம் நாள் அல்லது உயிர்த்தெழுந்து ஐம்பதாம் நாள் தூய ஆவி திருச்சபை மீது இறங்கியதை நாம் காணலாம்.
எனவே இந்த பெந்தேகோஸ்தே நாள் திருச்சபைக்கு மிகவும் முக்கியமான ஒரு திருநாளாகக் காணப்படுகின்றது. இதைக் குறித்து ஆவியரின் வருகையைக் குறித்து அநேக பாடல்கள் எங்கள் மத்தியில் காணப்பட்டாலும் இன்றைய நாட்களிலே இது தொடர்பாக அநேக சட்சைகளும் குழப்பங்களும் திருச்சபைகளுக்கிடையே இருப்பதை நாம் காணலாம்.
தூய ஆவியானவர் ஒற்றுமையின் ஆவியானவர் (எபேசியர் 4:1-6, எபேசியர் 2:14-18, 1 கொரிந்தியர் 1:10-14). எனவே எம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நாம் இடம்கொடுப்போமாக. ஆமேன்.
ஆக்கம்
அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்
பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்

Comments
Post a Comment