Trinity - The Divine Communion of Love

 திரித்துவம் - தெய்வீக அன்பின் கூட்டுறவு

பெந்தேகோஸ்தே ஞாயிறின் பின்னர் திருச்சபையின் நாட்காட்டியில்; வருவது ‘திரித்துவ ஞாயிறு’ என அழைக்கப்படுகின்றது. இது ஓர் நீண்ட காலத்தை உள்ளடக்கிய பல ஞாயிறுகளை கொண்டதாகும். பொதுவாக ‘திரித்துவம்’ பற்றி நாம் என்னும் போது 4ம், 5ம் நூற்றூண்டுகளிலேயே ‘இயேசு யார்’ என்பதை விளங்கப்படுத்துவதற்காக இக்கொள்கை திருச்சபையில் ஏற்படுத்தப்பட்டதொன்றாகும். 

திருமறையில் நாம் இதனைப் பற்றி பார்ப்பது குறைவாகவே காணப்படுகின்றது. ‘திரித்துவம்’ மனித வாழ்வில் பெரியதோர் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக பல பாடல்கள் திரித்துவத்தைப் பற்றி எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றன. 

1. திரித்துவம்: தெய்வீக அன்பின் உன்னத வெளிப்பாடு

The Trinity: The Perfect Revelation of Divine Love

மனித வாழ்வில் அன்பு மிக முக்கியமானதொன்றாகும். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள அன்பு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள அன்பு, மேலும் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள அன்பு என நாம் இதனைப் பாகுபடுத்தலாம். எனினும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள அன்பை திரித்துவத்தினூடாக நாம் காண்கின்றோம். 

தந்தை, மைந்தன், தூய ஆவியர் ஆகிய கடவுளர் இடையே எத்தகைய பாகுபாடும் இல்லாமல் அன்பு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இவ்வன்பு மனித வாழ்வோடு இணைக்கப்பட்டதொன்றாகவே காணப்படுகின்றது. குறிப்பாக எபேசியர் 1:10ம் வாக்கியத்திலே ‘கிறிஸ்துவுக்குள் அனைத்தும் கூட்டிணைக்கப்படும்’ எனக் கூறுவது எல்லைகளை தாண்டிய ஓர் கூட்டுறவாகும். எனவேதான் கலாத்தியர் 3:28லும் ‘கிறிஸ்துவுக்குள் எத்தகைய வர்க்க வேறுபாடுகளும் இல்லை’ என்று கூறுவதும் அந்த அன்பின் வெளிப்பாடு ஆகும். 

2. அன்பு: கடவுளின் உயர்ந்த வெளிப்பாடு

Love: God’s Most Powerful Revelation

கடவுள் தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். சிறப்பாக தொடக்கநூல் 12:7ல் கடவுள் ஆபிரகாமுக்கு கர்வாலி மரத்தண்டையிலும், விடுதலைப்பயணம் 3:14ல் கடவுள் மோசேக்கு எரியும் முட்செடியின் மத்தியிலும் தமது வெளிப்பாடுகளை மேற்கொண்டார். எனினும் கிறிஸ்துவினூடாக கடவுள் தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்தியதையே நாம் சிறப்பு வெளிப்பாடு என அழைக்கிறோம். இதனை எபிரேயர் 12:1,2ம் வாக்கியங்களில் நாம் காணலாம்.  

திரித்துவமும் ஓர் சிறப்பு வெளிப்பாடே ஆகும். ஏனெனில் அது வேறுபாடுகளின் மத்தியில் ஓர் ஒற்றுமைக்கான அழைப்பாகும். தந்தை, மைந்தன், தூய ஆவியர் ஆகிய கடவுள் இடையே எந்த வேறுபாடுகளும் காணப்படுவதில்லை. அவர்களிடையே நிலவுகின்ற அன்புறவு ஓர் ஒற்றுமையை ஏற்படுத்துகின்றது. இது எங்களுக்கு மிகப் பெரிய ஒரு சவாலை ஏற்படுத்துகின்றது. 

யோவான் 17:20,21ல், “தந்தையே நானும் நீரும் ஒன்றாயிருப்பதுபோல இவ்வுலக மக்கள் அனைவரும் ஒன்றாயிருக்க உம்மை வேண்டுகின்றேன்’’ என இயேசுவினுடைய மன்றாடல் இன்னமும் ஓர் அர்த்தமுள்ள அன்பின் மன்றாடலாகவும்  ஓர் ஒற்றுமைக்கான அழைப்பாகவும் காணப்படுகின்றது. 

3. அன்புறவு: சமத்துவத்தின் பாதைக்கு அழைப்பு

Love in Relationship: A Call to Equality

அன்பு நிலவுகின்ற போது அது சமத்துவத்தை ஏற்படுத்துகின்றது. தந்தை, மைந்தன், தூய ஆவியாகிய கடவுளரிடையே சமத்துவம் காணப்படுகின்றது. சிறப்பாக அவர்களிடையே எத்தகைய போட்டிகளும் காணப்படுவதில்லை.

 இது இன்றைய உலகில் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது. ஏனெனில் ஆணாதிக்கம் மிக்க உலகில் ஆண் பெண் சமத்துவம் காணப்படுவதில்லை. தொடக்கநூல் 1:25-28ல், கடவுளில் சாயலில் படைக்கப்பட்ட மக்களிடையே எத்தகைய ஆதிக்கங்களும் செலுத்த முடியாது என்பதை நாம் காண்கின்றோம். எனவே அன்பு ஆதிக்கத்தை அகற்றுகின்றது. இதற்கூடாக ஆதிக்கம் இல்லாத சமூகம் கட்டப்படவேண்டும் என்ற உண்மை உணர்த்தப்படுவதை நாம் காணலாம்.

நிறைவாக

திருமறையும் திரித்துவமும் பற்றி நாம் எண்ணுகின்றபோது திருமறையில் ‘திரித்துவம்’ பற்றிய சொல் காணப்படுவதில்லை. ஆனால் கடவுளின் பன்மைத் தன்மையைப் பற்றி நாம் பார்க்கலாம். குறிப்பாக தொடக்கநூல் 1:28ல் “நமது சாயலின்படி மானிடரை உருவாக்குவோம்”, தொடக்கநூல் 11:1-10ல் “நாம் இறங்கிப்போவோம்”இ ஏசாயா 6:8ல் “யாரை நான் அனுப்புவேன்?  யார் நமது காரியமாகப் போவார்?” இவைகள் கடவுளின் பன்மைத் தன்மையை எமக்கு  எடுத்துக் காண்பிக்கின்றன. மேலும் திரித்துவத்தைப் பற்றி பார்க்கும்போது தொடக்கநூல் 1:1-3 வரையுள்ள பகுதியில் ‘கடவுளின் ஆவி நீரின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்’ என்ற பகுதியும், லூக்கா 3:1-17ல் இயேசுவின் திருமுழுக்கின்போது தூய ஆவியர் அவர்மீது பொழியப்பட்ட நிகழ்வுகள், 2 கொரிந்தியர் 13:13ல் வெளிப்படுத்தப்படுகின்ற இறை ஆசிக்காக நாம் பயன்படுத்தப்படுகின்ற பகுதி போன்றவைகளும் இப்பன்மைத்தன்மையை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றன. 

அத்துடன் மத்தேயு 28:19,20ல் பயன்படுத்தப்படுகின்ற தந்தை, மைந்தன், தூய ஆவி ஆகிய பதங்கள் பிற்சேர்க்கையாக எம்மிடையே வலம்வருகின்றன. எனவே திரித்துவ கடவுள் பற்றிய கோட்பாடு தற்காலத்தில் ஓர் அன்பின் கோட்பாடாக வெளிப்படுத்தப்படுகின்றது. அவ் அன்பு சமத்துவத்திற்காக எம்மை அழைக்கின்றது. ஒற்றுமையை ஏற்படுத்த எமக்கு சவால் விடுகின்றது. எனவே இதனைக் கருத்திற் கொண்டு நாம் செயற்பட இன்றே முயற்சிப்போமாக. ஆமென்.


ஆக்கம்

அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர், இலங்கை


Comments