Worship - In God's Presence, For God's purpose

வழிபாடு – கடவுளின் பார்வையில் அவருக்குரியதே



முன்னுரை

வழிபாடு என்பது கடவுளுக்குரிய மதிப்பையும் அல்லது மரியாதையையும் ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ தாம் வாழும் சூழலில் வார்த்தையாலோ அல்லது செயல் வடிவிலோ மேற்கொள்ளப்படுகின்ற உன்னத செயற்பாட்டை நாம் வழிபாடு என அழைக்கின்றோம். சிறப்பாக இவ்வழிபாட்டை தனிநபர் வழிபாடு, கூட்டுவழிபாடு என பொதுவாகப் பிரிப்பார்கள். ஒரு வழிபாடு பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிதொன்றாகும். உதாரணமாக நீதிச் சூழலில் (திருப்பாடல் 137), ஒப்புரவாகுதல் சூழலில் (மத்தேயு 5:22-24), உண்மைச் சூழலில் (யோவான் 4:24) போன்ற பல்வேறுபட்ட சூழல்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது. 

1. வழிபாட்டின் முக்கியத்துவம்

பொதுவாக வழிபாட்டை குறித்து நாம் எண்ணும் போது அதில் மன்றாடல் முக்கியமானதாகும். சிறப்பாக ஏசாயா 6:1-8ல் உசியா என்னும் அரசன் இறந்த போது ஏசாயா தன் உள்ளத்தில் இருக்கும் குமுறல்களை இறைவனிடம் கொட்டித் தீர்க்க வழிபட ஆலயத்திற்குள் செல்கின்றார். ஆனால் இறைவன் தன்னுடைய உட்கிடக்கையில் இருந்து ஏசாயாவைப் பார்த்து தன்னுடைய பாரத்தை ஏசாயாவோடு பகிர்ந்து கொள்கின்றார். அதாவது வழிபாட்டில் நாம் எமது இதயத்தை கடவுள் பார்க்க வேண்டும் என எடுத்துக் கூறுவது மாத்திரமன்றி கடவுளின் இதயத்தை நாம் புரிந்துகொள்ளக் கூடிய மனநிலை வழிபாட்டில் அவசியமாகின்றது. எனவேதான் ஏசாயா 6:8ல், “இதோ நான் இருக்கிறேன். என்னை அனுப்பும்” என ஏசாயா கூறுவதை நாம் அவதானிக்க வேண்டும். ஏனெனில் ஓர் வழிபாடு கடவுளின் பணிக்காக எம்மை ஆயத்தப்படுத்துவதற்கும் அனுப்புவதற்கும் ஏற்ற ஊடகமாக இருப்பதை நாம் காணலாம். 

2. வழிபாடும் வாழ்வும்

சிறப்பாக வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு மிக அவசியமாகின்றது. இவ்விரண்டையும் நாம் பிரித்து விட முடியாது. இதனையே ஆமோஸ் 5:18-21 வரையுள்ள பகுதியில் ஆமோஸ் எடுத்துக் காண்பிக்கின்றார். அதாவது வாழ்வும் வழிபாடும் பின்னிப்பிணைந்ததாக அமைய வேண்டும். அது வார்த்தையோடு மாத்திரமன்றி செயல்களும் அதற்குள் இணைந்திருக்க வேண்டும். இதனையே திருத்தூதுவர்பணிகள் 2:42-47 வரையுள்ள பகுதிகள் காண்பிக்கின்றன. அதாவது ஆதிக் கிறிஸ்தவ சமூகத்தில் வார்த்தைகள் மட்டுமன்றி செயல்களும் வழிபாட்டில் ஒரு பகுதியாக அமைந்திருந்ததை நாம் காணலாம். எனவே மனமாற்றம் அடைந்த அனைவரையும் திருச்சபைக்குள் கடவுள் இணைத்துக்கொண்டார். இதன்மூலமாக வழிபாடு மக்களை ஒன்றிணைக்கும் இடமாகவும் மனம்மாற்றம் அடைந்து திருச்சபைக்குள் மக்கள் நுழைந்து கொள்ளும் இடமாகவும் காணப்படுவதை நாம் காணலாம். 

3. வழிபாடு எதிர்நோக்கும் சவால்கள்

திருப்பாடல் 100ஐ நாம் படித்துப்பார்க்கும் போது அங்கு ஆசிரியர் வழிபாடு மனித வாழ்வில் முக்கியமானதொன்றாக காண்பிக்கின்றார். இதுவோர் பவனி பாடலாகக் காணப்படுகின்றது. அதாவது எருசலேம் ஆலயத்திற்குள் பவனியாக வரும் சமூகம் இப்பாடலை பாடி வருவது வழக்கம். இதனுடன் இணைத்து திருப்பாடல் 121, திருப்பாடல் 24 போன்றவைகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இங்கு ‘கடவுள் நல்லவர்’ என்பதை வழிபாட்டினூடாக ஆசிரியர் காண்பிக்கின்றார். ‘அவருடைய அருள் என்றுமுள்ளது’ என்பதை நினைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறார். இங்கு ‘அருள்’ என்பது ‘தகுதியற்றவர்கள் மீது கடவுள் காண்பிக்கும் இரக்கம்’ என பொருள்படுகின்றது. எனவே ஓர் வழிபாட்டுச் சூழலில் நாம் கடவுளை நல்லவர் என்றும், அவர் எம்மீது பாராட்டி உள்ள இரக்கம் என்றுமுள்ளது என்பதையும் நினைந்துகொள்வது மாத்திரமன்றி நாம் வழிபடுவதற்கு தகுதியற்றவர்கள் என்ற மனநிலை எமக்கு வருவது எமக்கு அவசியமாகின்றது. மேலும் இவ்வழிபாடு மாற்கு 12:28-32 வரையுள்ள பகுதியில் கடவுளையும் மனிதனையும் இணைக்கும் ஊடகமாகவும் காணப்படுகின்றது. அதாவது பத்துக் கட்டளைகளின் சுருக்கமாக இரண்டு கட்டளைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. முதலாவது கட்டளை “இஸ்ரவேலே கேள்” என ஆரம்பிப்பது கடவுளையும் மனிதனையும் இணைக்கின்றது. “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல் பிறனிடத்திலும் நீ அன்புகூருவாயாக” என்பது மனிதனையும் மனிதனையும் இணைக்கின்றது. எனவே கடவுளோடு உள்ள ஆன்மீக உறவு அது மனிதனிடத்திலே காண்பிக்கப்பட வேண்டும் என்கின்ற உண்மையையும் வழிபாடு ஞாபகப்படுத்துகின்றது. 

முடிவுரை

வழிபாடு மிக அவசியமானது என்பதை நாளாந்த வாழ்வில் நாம் அனுபவிக்கின்றோம். அதாவது  D.ட.மூடி என்ற அறிஞர் கூறுவது போன்று “உண்மையான வழிபாடு மனிதனின் உணர்வின் அடித்தளத்தில் இருந்தே உருவாகின்றது.” அதாவது ஓர் பெருமூச்சு விடுகின்ற போது அது எவ்வளவு அர்த்தமுள்ளது என நாம் உணருகின்றோம். எனவே அதுவே உண்மையான வழிபாட்டின் அடித்தளம் என காண்பிக்கின்றார். எனவே இறைவனை நோக்கி நாம் எழுப்புகின்ற அவலக்குரல்கள், கூக்குரல்கள், நீதிக்குரல்கள் போன்றவைகளும் வழிபாட்டின் ஒரு பகுதியாக காணப்பட வேண்டும். யோவான் 4:24ல் ஆண்டவர் இயேசு கடவுளை உண்மையோடு வழிபடுமாறு கேட்டுக்கொள்கின்றார். எனவே உண்மைத்தன்மையுள்ள, நீதித்தன்மையுள்ள, ஒப்புரவாகுதல் தன்மையுள்ள வழிபாடுகளே உண்மையான வழிபாடுகள் ஆகும். இவற்றை நாம் வார்த்தையாலும், செயலாலும் செய்ய கடவுள் எமக்கு அருள்புரிவாராக. ஆமென். 


ஆக்கம் 

அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்

Comments