சீடத்துவத்தின் அழைப்பும் அடையாளமும்வந்து பாருங்கள்



முன்னுரை

ஆண்டவர் இயேசு இறையாட்சியை அறிவிக்கவே இவ்வுலகிற்கு வந்து வந்தார் (மாற்கு 1:14,15). அதனை பிறருக்கு எடுத்துச் செல்லுவதற்காக தமது சீடர்களை தெரிவு செய்தார். இவர்கள் அனுப்பப்பட்டவர்களாக எப்பொழுதும் காணப்பட்டனர். (லூக்கா 10:1-12) புற இனத்தவர் மத்தியில் பணியை அறிவிக்க சென்றவர்கள்.

மேலும் லூக்கா 8:1-3ல் இயேசுவுக்கு இப்பணியை நிறைவேற்ற பெண் சீடர்களும் காணப்பட்டனர். யோவான் 3:1-6, யோவான் 19:41 ஆகிய பகுதிகளில் அவர்கள் அவருக்கு இரகசிய சீடராக முறையே நிக்கோதேமுவும் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புவும் காணப்பட்டிருந்தனர். மேலும் இயேசுவின் சீடராக மாறுவதற்கு லூக்கா 14:27ன் படி “ஒருவர் தன்னலம் துறந்து மற்றவர்களுடைய நன்மைக்காக சிலுவை அனுபவத்தைப் பெற வேண்டும்” என இயேசு கூறுகின்றார். யோவான் 13:34-35ல், நாம் ஒருவரிலொருவர் அன்பு கூறுவதும் இயேசுவின் சீடத்துவத்திற்கான இன்னுமோர் அடையாளமாகும்.

வந்து பாருங்கள்" – அனுபவத்தின் அழைப்பு

யோவான் 1:38-42 வரையுள்ள பகுதியில் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடத்திலே “ரபீ நீர் எங்கு இருக்கின்றீர்?” என்று கேட்டார்கள். அவர்களில் ஒருவர் சீமோன் பேதுருவின் சகோதரராகிய அந்திரேயா ஆவார். இயேசு அவரை நோக்கி “வந்து பாரும்” என அழைக்கின்றார். இவ்வழைப்பு ஓர் விசித்திரமான அழைப்பாகவே காணப்படுகின்றது.

பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய சீடர்கள் அழைக்கப்பட்ட வரலாற்றை நாம் பார்க்கும்போது மத்தேயு 4:18-25 வரையுள்ள பகுதியில் அவர்கள் கலிலேயா கடற்கரையோரமாக வலைகளை பழுது பார்க்கும்போது இயேசுவால் அழைக்கப்பட்டவர்கள் ஆவர். மேலும் பேதுருவின் தனி அழைப்பினை லூக்கா 5:1-15 வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். எனவே ஆண்டவர் இயேசு இவர்களை நோக்கி, “வந்து பாருங்கள்” என அழைப்பது அனுபவம் சார்ந்த ஓர் அழைப்பாகும்.

"போய்ச் சொல்லுங்கள்" – சாட்சியின் பணி

அனுபவ ரீதியில் அழைப்பைப் பெற்ற ஒருவர் அந்த அழைப்பை தனக்குள் அடக்கி வைக்காமல் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கூற்று இதனை எடுத்துக் காண்பிக்கின்றது. அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோன் பேதுருவைக் கண்ட போது “நாம் மேசியாவைக் கண்டோம்” என்று சென்று சொல்லுகின்றார். இது தனிநபர் சார்ந்த சென்று சொல்லுதல் என நாம் விளக்கலாம். 

மெசியா என்பதற்கு ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்’ அல்லது ‘அருட்பொழிவு பெற்றவர்’ என்று பொருள்படும். மேலும் மாற்கு 5:1-19ல் லேகியோன் என்ற பேய்ப்பிடித்த மனிதரை இயேசு குணமாக்கியதன் பின்னர் இயேசு அவரை நோக்கி “கடவுள் உனக்கு இரங்கிச் செய்ததை நீ உன் இனத்தாரிடத்திலே சென்று சொல்லு” எனக் கூறுகின்றார். இங்கே தனிநபர் மையத்திலிருந்த சென்று சொல்லும் அனுபவம் ஓர் குடும்பத்தார் மத்தியிலும் சென்று சொல்ல வேண்டிய புதியதோர் நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் காணலாம்.

யோவான் 4:1-42 வரையுள்ள பகுதியில் தனிநபராக இயேசுவை அனுபவித்த சமாரிய பெண்ணிடம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட அவள் நான் சென்று இவ்வார்த்தைகளை பிறருக்கு எடுத்துக் கூறுவதாக சொல்லிச் செல்லுகின்றாள். இது பெரிய சமூகத்திற்கே சென்று சொல்லும் அனுபவத்தை உள்ளடக்கியதாகும்.

உயிர்த்தெழுந்த இயேசு யோவான் 20:1-18ல் மகதலேனா மரியாளை நோக்கி, “உன் சகோதரர்களிடத்திலே நீர் உயிர்ப்பின் நற்செய்தியை எடுத்துச் சென்று சொல்லு” எனக் கூறுகின்றார். எனவே சென்று சொல்லுதல் ஆண்களுக்கு உரியதாக மட்டும் அமையாமல் பெண்களும் இப்பணியில் இணைந்து கொள்ளுதல் அவசியமாகின்றது.

மத்தேயு 28:19-20ல் ஆண்டவர் இயேசு தமது சீடர்களை நோக்கி, “நீங்கள் புறப்பட்டுச் சென்று உலகம் முழுவதற்கும் சென்று சொல்லுங்கள்” என அழைக்கின்றார். 

எனவே தனிமனிதனிடையே நிலவிய சென்று சொல்லும் அனுபவம் குடும்பங்களுக்குப் பரிமாறப்பட்டு, சமூகத்திற்கு பரிமாறப்பட்டு, தற்பொழுது அனைத்துலகம் சார்ந்த ஓர் பரிமாற்றத்தை அடைவதை நாம் பார்க்கின்றோம். இங்கு சீடர்கள் ஆக்குதல் என்பது போதனை மையத்தில் உருவாக்கப்பட வேண்டியதொன்றாகும். 

இது குருத்துவத்தாலோ கிறிஸ்தவத்தாலோ பிரதிநிதிப்படுத்திவிட முடியாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே சென்று சொல்லும் அனுபவம், அனுப்பப்படும் அனுபவம் மிகவும் முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது.


நிறைவாக,

அனுபவத்திலிருந்து அர்ப்பணிப்பிற்க்கு 

நற்செய்தி பரிமாற்ற வரலாற்றில் சென்று சொல்லுகின்ற அனுபவம் ஆரம்பத்தில் திருச்சபை மைய கேந்திரத்திலேயே நடைபெற்றது. 1952ம் ஆண்டு வெலிங்டனில் கூடிய தூதுப்பணி மைய மகாநாட்டின் பின்னர் இத்தூதுப் பணி மையம் கடவுள் மையத்தை நோக்கி நகர்ந்தது. நாம் மாத்திரமல்ல பிறரும் சீடராக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காண்பித்தது. 

எனவே சீடராக்கும் பணி ஓர் மரணத்தை நோக்கிய பணியாகும். குறிப்பாக ஓர் சீடனுக்கு கிடைக்கும் பரிசு தன்னுயிரை பிறனுக்காக கொடுப்பது என மாற்கு 10:45ம் வசனத்தில் நாம் காண்கிறோம். இப்பணி வாழ்வில் கி.பி.42ம் ஆண்டு யாக்கோபு ஏரோதுவின் வாளினால் வெட்டப்பட்டார். மேலும் யூதக் கலாபணையின் விளைவாக ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டார். இப்படியாக சீடராக்கும் பணியையும் சீடராகிய விளைவின் நிமித்தமும் தம் உயிரை பிறருக்காக அர்ப்பணித்தவர்கள் ஏராளம்.

எனவேதான் இயேசு, “ஒருவர் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால் தன் சிலுவையை சுமந்து கொண்டு வருதல் அவசியம்” என்ற கூற்று இன்றும் யதார்த்தமுள்ளதாகும். எனவே வந்து பார்த்து பெற்றுக் கொண்ட அனுபவத்தை சென்று சொல்லி உலகுக்கு சீடத்துவத்தை வார்த்தையாலும், வாழ்க்கையாலும் பிரஸ்தாபப்படுத்துவோமாக. ஆமேன்.

ஆக்கம்
அருட்பணி.அருளம்பலம் ஸ்டீபன்
பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர்


Comments