நெருக்கடியான காலங்களில் ஊழியம் செய்வது புதிய சவால் அல்ல. இஸ்ரவேலின் இறைவாக்கினர் முதல் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் வரை, தொடக்க கால திருச்சபையிலிருந்து இன்றைய காலம் வரை, கடவுளின் மக்கள் எப்போதும் நிச்சயமற்ற சூழ்நிலைகள், துன்பங்கள் மற்றும் சமூகக் கலக்கங்களின் நடுவே பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடி என்பது ஊழியத்திற்கு இடையூறு அல்ல; மாறாக உண்மையான கிறிஸ்தவ ஊழியம் வெளிப்படும் தருணமாகும்.
ஊழியம் என்பது அவசரநேர உதவி செய்வதோ அல்லது பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை வகுப்பதோ மட்டும் அல்ல. (அவற்றுக்கும் முக்கியத்துவம் உண்டு). ஆனால் கிறிஸ்தவ ஊழியத்தின் மையம் செயல்பாட்டில் அல்ல, உடனிருப்பதில் உள்ளது. பலவீனருடன் பலவீனராக நிற்பதும், சலுகைகளைத் துறந்து ஒடுக்கப்பட்டோருடன் ஒற்றுமையாக இருப்பதும்,
"நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்" (மீகா 6:8) என்ற இறைவாக்கினை வாழ்வில் செயல்படுத்துவதும்தான் உண்மையான ஊழியம்.
கிறிஸ்து நிற்கும் இடத்திலே நிற்பதற்கான துணிவே ஊழியம்.
வலி, புறக்கணிப்பு, உடைந்த வாழ்க்கைகள் நிறைந்த இடங்களில் இயேசுவின் தீர்க்கதரிசன சாட்சியை அவரோடும், அவருக்குள்ளும் வெளிப்படுத்துவதே கிறிஸ்தவ அழைப்பு.
அதிகாரத்தின் உயரத்திலிருந்து ஊழியம் செய்வதற்குப் பதிலாக, அன்போடும் இரக்கத்தோடும் மக்களுடன் பயணிக்கும் பணிவான பாதையைத் தேர்ந்தெடுப்பதே உண்மையான சீடத்துவம்.
இப்படிப்பட்ட ஊழியம் நெருக்கடிகளை வெறுமனே சமாளிக்காது; அவற்றை நம்பிக்கை, மனித மாண்பு மற்றும் நீதி மலரும் இடங்களாக மாற்றுகிறது.
இறுதியில், ஊழியத்திற்கான அழைப்பு என்பது அன்பிற்கான அழைப்பு.
அது மனிதராய் இறங்கி வந்த கிறிஸ்துவின் அன்பு; நீதியை அறிவிக்கும் தீர்க்கதரிசன அன்பு; மனிதர்களையும் சமூகத்தையும் மாற்றும் மறுரூப அன்பு. அந்த அன்பு நாம் சேவை செய்பவர்களை மட்டுமல்ல, நம்மையும் மாற்றுகிறது. காயமுற்றவர்களோடும் மறக்கப்பட்டவர்களோடும் கிறிஸ்துவுடன் இணைந்து நடக்கும்போது, உலகைப் புதுப்பிக்கும் இறைவனின் பணியில் நாமும் பங்குகொள்கிறோம்.
அப்போது நமது சமூகங்கள் மேலும் நீதியுள்ளவையாகவும், இரக்கமுள்ளவையாகவும், இறையாட்சியை பிரதிபலிக்கும் சமூகங்களாகவும் மாறுகின்றன.
அருள்பணி. முனைவர். ராஜ் பாரத் பட்டா.
சிந்தனைக்கு:
என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே; ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார். மீக்கா 7:8
Comments
Post a Comment