Saint Barnabas – The Apostle of Encouragement

திருத்தூதுவராகிய பர்னபா

முன்னுரை

கடவுள் பல்வேறுபட்ட காரணங்களுக்காக பலரை இவ்வுலகில் காலத்துக்கு காலம் தன் பணியை தொடருமாறு அனுப்புகின்றார். 

அவ்வாறு உலகுக்குள் அனுப்பப்பட்டு சிறப்பாக 

ஊக்குவிக்கும் பணி, நற்செய்தி பணி, ஒப்புரவாக்கும் பணி ஆகிய பணிகளை ஆற்றிய திருத்தூதுவராகிய பர்னபாவை இந்நாளில் நாம் நினைந்து கொண்டு அவருடைய வாழ்விற்காகவும் பணிக்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

1. ஊக்குவிக்கும் ஊழியம்

நாம் வாழும் இத்தகைய காலத்தில் இப்பேர்ப்பட்ட ஊழியங்களை கண்டுகொள்வது மிக அரிதாகக் காணப்படுகின்றது. எனினும் பர்னபா இவ் ஊழியத்தை செய்ததாக திருத்தூதுவர்பணிகள் 4:36ம் வாக்கியத்தில் கூறப்படுகிறது. 

சோர்ந்துபோன, பலவீனப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட தனிமனிதர்களை சமூகங்களை ஊக்குவிக்கும் பணியில் பர்னபா தன்னை ஈடுபடுத்தி இருந்தார். இதனால் இவரை ‘ஆறுதலின் மகன்’ எனவும் அழைத்தனர். 

இவ்வுலகில் இந்நாட்களில் ஆறுதல் வழங்குவதற்காக ஆறுதலைப் பெறுவதற்காக மக்கள் காத்திருக்கின்றார்கள். ஆனால் ஆறுதலை வழங்க யாருமில்லாத சூழ்நிலையில் இன்றைய ஊழியத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இவரின் வாழ்வு ஓர் சவால் நிறைந்த வாழ்வாகும்.

2. நற்செய்தியை அறிவிக்கும் பர்னபா

திருத்தூதுவர்பணிகள் 11:16 வசனத்திலிருந்து வாசித்து பார்க்கும்போது பர்னபா நற்செய்தி பணியைச் செய்யும் ஓர் ஊழியக்காரனாகக் காட்டப்படுகின்றார். 

அதாவது ஆண்டவரினுடைய வார்த்தையை வாழ்க்கையாலும், வார்த்தையாலும் எடுத்துச் சொல்லும் அல்லது எடுத்துச் செல்லும் ஓர் ஊடகமாக பர்னபா காண்பிக்கப்படுகின்றார். 

அந்நாட்களில் திருச்சபை ஓர் இடத்திலிருந்து இன்னொரிடத்திற்குச் செல்லும் ஓர் சிதறடிக்கப்படும் திருச்சபையாகக் காணப்பட்டது. அவ் இடங்களில் இந்நற்செய்தி விதைக்கப்பட்டதை நாம் காணலாம். எனவே நற்செய்தியை அறிவிப்பவராக பர்னபா காணப்பட்டிருந்தார்.

3. ஒப்புரவாக்கும் பர்னபா

திருத்தூதுவர்பணிகள் 15:36-41ம் வசனம் வரையுள்ள பகுதியில் பவுலின் 2ம் வேதபோதக பயணத்தில் யோவான் மாற்குவை சேர்த்துக் கொள்வதா இல்லையா என பவுல் போராடுகின்றார். 

1ம் பயணத்தின் போது இடைநடுவில் அவர் விட்டுச் சென்றவர் படியால் அவரை சேர்த்துக் கொள்ள முடியாது என திடமாக உறுதிக் பூள்கிறார். எனினும் பர்னபாவை பொறுத்த வரையிலே யோவான் மாற்குவை இணைத்துக் கொண்டு செல்ல அவர் விரும்புகின்றார். 

எனவே பவுல் சீலாவையும், பர்னபா மாற்கு உடனும் புறப்பட்டு பணிக்காகச் செல்லுகின்றனர். எனவே இந்நிலையில் பர்னபா ஒப்புரவாக்குபவராகவும் கைவிடப்பட்டவர்களையும் தவறிழைத்தவர்களையும் இணைத்து பணிக்கு பயன்படுத்துபவராகவும் காட்டப்படுகின்றார்.

முடிவுரை

இன்றைய திருச்சபை பர்னபாவிடமிருந்து ஊக்குவித்தலின் ஊழியத்தையும், நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தையும், ஒப்புரவாக்கும் ஊழியத்தையும், தவறிழைத்தவர்களை ஊழியத்தில் பயன்படுத்தும் பண்பையும் பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றது. 

இப்பண்புகள் தொலைந்துபோனவைகளாகவும் மறக்கப்பட்டவைகளாகவும் இன்றைய திருச்சபைகளினால் அங்கீகரிக்கப்படாதவைகளாகவும் அமைகின்றன. எனவே இவ் ஊழியங்களுக்கு புத்துயிர் கொடுத்து இவ் ஊழியங்களையும் வாழ வைப்பதன் ஊடாக அநேகர் வாழ்வதற்கு நாம் கருவிகளாக பயன்பட எம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போமாக. ஆமென்.

ஆக்கம்

அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்

பரி.யாக்கோபு ஆலயம் நல்லூர். இலங்கை


 

Comments